ADDED : மார் 15, 2024 12:42 AM
சென்னை:தமிழக ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி, மூன்று வீடுகள் அல்லது, 750 சதுர மீட்டருக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும், கட்டட நிறைவு சான்று இன்றி, மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
மற்ற அனைத்து வகை கட்டடங்களுக்கும், மின் இணைப்பு வழங்க கட்டட நிறைவு சான்றை, மின் வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், எட்டு வீடுகள் வரையிலான கட்டடங்களுக்கு, கட்டட நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளித்து, சமீபத்தில் அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து, குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கூறியதாவது:
வீடுகளுக்கு அருகேயுள்ள காலி இடங்களில், குறைந்த சதுர அடியில் அமைக்கப்படும் மின்வாகன சார்ஜிங் மையம், மளிகை கடை என, வணிக பிரிவில் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் கூட, கட்டட நிறைவு சான்று சமர்ப்பிக்கும்படி கேட்கின்றனர்.
இதனால், குறு, சிறு பிரிவில், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் துவக்க முடியவில்லை. எனவே, குறைந்த சதுர அடியில், வணிக, தொழில் நிறுவனங்கள் துவக்க, கட்டட நிறைவு சான்று சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

