நரிக்குறவர், இருளர் சமூகத்தினருக்கு ரூ.5,000 உதவித்தொகை தர கோரிக்கை
நரிக்குறவர், இருளர் சமூகத்தினருக்கு ரூ.5,000 உதவித்தொகை தர கோரிக்கை
ADDED : மே 02, 2025 08:37 PM
சென்னை:'உப்பள தொழிலாளர்களுக்கு வழங்குவதை போல, நரிக்குறவர், இருளர், ஆதியன் சமூகத்தினருக்கும், தொழில் இல்லாத காலங்களில், மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும்' என, விளிம்பு நிலை பழங்குடி கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார் கூறியதாவது:
தமிழகத்தில், இருளர், காட்டு நாய்க்கர், கோண்டா ரெட்டி உள்ளிட்ட, 37 க்கும் மேற்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
வேதனை
இவர்களில், நரிக்குறவர், இருளர், பூம்பூம் மாட்டுக்காரர் எனப்படும் ஆதியன் சமூகத்தினர், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என, அனைத்து நிலைகளிலும் பின்தங்கியுள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அரசு சிறப்பு கவனம் செலுத்த மறுப்பது வேதனையாக உள்ளது.
இச்சமூக மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்வது கிடையாது. இவர்கள் பருவ காலத்திற்கு ஏற்ப, ஊர் ஊராக வேலை தேடி செல்வர்.
அந்த குறிப்பிட்ட மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே, மீதமுள்ள மாதங்களை கடத்தி வருகின்றனர். நரிக்குறவர்களில் பெரும்பாலானோர் கோவிலுக்கு செல்வோர் பயன்படுத்தும், மாலை கோர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. அதேபோல, இருளர் சமூகத்தினர், காடுகளில் வளரும் அரிய வகை மூலிகைகள் வாயிலாக, மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
ஏழு முதல் எட்டு மாதம்
இச்சமூக மக்கள் அனைவரும், குறிப்பிட்ட சில மாதங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, மீதமுள்ள ஏழு முதல் எட்டு மாதங்களை கடத்த வேண்டி உள்ளது.
அரசு மழை காலங்களில், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களுக்கும், மீன்பிடி தடைவிதிப்பு காலங்களில் மீனவர்களுக்கும், அவர்கள் குடும்ப செலவிற்கு, மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது.
அதேபோல, நரிக்குறவர், இருளர், ஆதியன் சமூகத்தினருக்கும், வேலையற்ற காலங்களில் மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.