ADDED : ஜன 09, 2025 11:05 PM
சென்னை:'பொதுமக்கள் டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாரியத்தின் தலைவர் ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை:
நம் முன்னோர் பொங்கலுக்கு முன், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், போகிப் பண்டிகையை கொண்டாடினர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட, பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால், காற்று மாசுபடாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இருந்து வந்து உள்ளது.
இப்போது, பிளாஸ்டிக், செயற்கை இழைகளில் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு அடைகிறது. போகி அன்று பொருட்களை எரிக்கும் போது ஏற்படும் புகையால், விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகிறது. வாகன விபத்துக்கும் புகை காரணமாகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் ஏற்படும், நச்சு வாயுவால், மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், 20 ஆண்டுகளாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.
அதனால், கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது பெரும்பாலும் குறைந்தது. இந்த ஆண்டு போகியின் போது, சென்னையில் காற்று தரத்தை கண்காணிக்க 15 இடங்களில், 24 மணி நேரமும் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காற்றின் தர அளவு, வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும், விழிப்புணர்வு பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், போகியை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.