ADDED : மே 13, 2025 03:52 AM

சென்னை: 'கன்னியாகுமரி - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வாராந்திர ரயிலை தினமும் இயக்க வேண்டும்' என, ரயில்வே நிர்வாகத்திற்கு, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு, 2003 முதல் சனிக்கிழமைதோறும் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இந்த ரயில் செல்கிறது.
நடவடிக்கை
இதில், எப்போதும் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதாவது, 'சிலீப்பர்' முன்பதிவு பெட்டிகளில், 196 சதவீதம்; 2ம் வகுப்பு 'ஏசி' - 182 சதவீதம்; 3ம் வகுப்பு 'ஏசி' - 163 சதவீதம் என, சராசரியாக பயணியர் முன்பதிவு, 184 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எனவே, பயணியர் தேவையை கருத்தில் கொண்டு, இந்த ரயிலை தினமும் இயக்க, ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:
மதுரை - கன்னியாகுமரி இடையே, இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்தும், இன்னும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. புதிய ரயில்கள் இயக்காவிட்டாலும், பயணியருக்கு தேவையான சில ரயில்களையாவது, தென்மாவட்டங்களுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
கோரிக்கை மனு
அந்த வகையில், கன்னியாகுமரி - ஹவுரா இடையே இயக்கப்படும் வாராந்திர ரயிலில், இரு மார்க்கத்திலும் எப்போதும் கூட்டம் அதிகம் உள்ளது.
முன்பதிவு செய்து காத்திருப்போரில் பலருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே, இந்த ரயிலை தினமும் இயக்க வேண்டும்.
ரயில்வே வாரியத்துக்கும், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்துக்கும், கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.