இருமல் மருந்திற்கான கரைப்பான்கள் தேவைக்கு ஏற்ப வழங்க கோரிக்கை
இருமல் மருந்திற்கான கரைப்பான்கள் தேவைக்கு ஏற்ப வழங்க கோரிக்கை
ADDED : அக் 26, 2025 01:00 AM

சென்னை: ' இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்படும், 'புரோப்பிலின் கிளைக்கால்' எனப்படும் கரைப்பான்களை, தேவைக்கேற்ப உற்பத்தி நிறுவனங்களே நேரடியாக வழங்க வே ண்டும்' என, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சட்ட நடவடிக்கைகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை உட்கொண்ட, 26 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த மருந்தை தயாரித்த, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன.
இதற்கிடையே, ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்துகளை பகுப்பாய்வு செய்ததில், 'டை எத்திலீன் கிளைக்கால்' என்ற ரசாயன நச்சு இருப்பது கண்டறியப்பட்டது. இது, ரெசின், ஆயில், பெயின்ட், மை தயாரிக்கும் போது, திரவமாக்க பயன்படுத்தப்படும் கரைப்பான் சேர்மம்.
திரவ மருந்துகளில், புரோப்பிலின் கிளைகால் சேர்மம் தான், கரைப்பானாக பயன்படுத்தப் படுகிறது.
ஆனால், கோல்ட்ரிப் மருந்தில், சில்லரை வணிகத்தில் வாங்கிய, புரோப்பிலின் கிளைகால் பயன்படுத்தப்பட்டு இ ருந்ததால், டை எத்திலீன் கிளைக்கால் அளவு, 48.6 சதவீதம் அதிகரித்து, குழந்தைகள் இறப்புக்கு காரணமாக அமைந்தது.
எனவே, மருந்துகளில் பயன்படுத்தப்படும், புரோப்பிலின் கிளைக்கால் சேர்மத்தை, உற்பத்தி நிறுவனங்களே தேவைக்கு ஏற்ப குறைந்த அளவில் வழங்க முன்வர வேண்டும் என, இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயசீலன் கூறியதாவது:
புரோப்பிலின் கிளைகால் கரைப்பான்களை, ரிலையன்ஸ், இந்தியா கிளைக்கால், பி.ஏ.எஸ்.எப்., டவ் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவர்களிடம் சில்லரை விற்பனை கிடையாது.
அசம்பாவிதம் குறைந்தது, 250 கிலோ மூட்டைகளில் மட்டுமே விற்பனை நடக்கிறது. குறு, சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு, அந்த அளவுக்கு புரோப்பிலின் கிளைக்கால் தேவைப் படாது; 25ல் இருந்து, 40 கிலோ மட்டுமே தேவை.
அதனை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் வாங்க முடியாது என்பதால், சந்தையில் இடைத்தரகர்களிடமும், சில்லரை வர்த்தகர்களிடமும், மருந்து உற்பத்தியாளர்கள் வாங்குகின்றனர்.
அவ்வாறு வாங்கும் போது, அதில் கலப்படம் ஏற்படுவதையோ, தரக் குறைபாடு இருப்பதையோ தவிர்க்க இயலாது.
அதிக லாபம் ஈட்டுவதற்காக, சில வர்த்தகர்கள் புரோப்பிலின் கிளைக்காலுடன், ரசாயனங்களை கலப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதைத் தவிர்க்க, பெரு நிறுவனங்களே குறைந்த அளவில், புரோப்பிலின் கிளைக்காலை, குறு, சிறு மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.
இந்த நடைமுறையை கட்டாயமாக்கும் பட்சத்தில், மருந்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அசம்பாவிதங்களும் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

