ADDED : ஜூலை 21, 2011 09:58 PM
புதுடில்லி: 'மத்திய அரசு கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், கட் - ஆப் மதிப்பெண்கள் நடைமுறையைப் பின்பற்றுவதில் உள்ள குழப்பம் குறித்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் மற்றும் நீதிபதி பட்நாயக் ஆகியோர் கூறியதாவது: சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள, 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும். 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து, அரசியல் சாசன 'பெஞ்ச்' ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. பொதுப் பிரிவின் கீழ் தகுதி பெற்ற, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவரும், 27 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படுவார் என, எடுத்துக் கொள்ளலாமா? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், போதுமான எண்ணிக்கையில் பயனடைந்திருக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனால், இந்த விவகாரங்களை எல்லாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. கட் - ஆப் மதிப்பெண்கள், தெளிவற்ற முறையில் கையாளப்படுவது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.