வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு; பழனிசாமி வாக்குறுதிக்கு எதிர்ப்பு; தென் மாவட்டங்களில் கண்டன போஸ்டர்
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு; பழனிசாமி வாக்குறுதிக்கு எதிர்ப்பு; தென் மாவட்டங்களில் கண்டன போஸ்டர்
ADDED : ஜூலை 28, 2025 04:16 AM

'வன்னியர் சமுதாயத்திற்கு, 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீட்டை அமல்படுத்துவேன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது; அதற்கான அரசாணையும் வெளியானது. ஆனால், அதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு, மத்திய அரசு அனுமதி தேவை இல்லை. மாநில அரசே தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, இட ஒதுக்கீடு வழங்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நிறைவேற்றி தருவேன்' என, விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பழனிசாமி அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு, தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. மேலும், முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில், கண்டன போஸ்டர்கள், தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது
:
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், வன்னியர் சமுதாய இடஒதுக்கீடு அறிவிப்பால், முக்குலத்தோர் சமுதாயத்தினர், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடவில்லை. அதனால், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.
வன்னியர் இட ஒதுக்கீடு அறிவிப்பால், முக்குலத்தோர் மட்டுமல்லாமல், சீர்மரபினர் பட்டியலில் இடம்பெற்ற மற்ற சமுதாயத்தினரும் பாதிக்கப்படுவர். அவர்களின் ஓட்டு வங்கியையும் அ.தி.மு.க., இழக்க நேரிடும்.
தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், 30 முதல் 45 தொகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -