ADDED : ஏப் 15, 2025 06:51 PM
சென்னை:'தெலுங்கானாவை பார்த்தாவது, தமிழக அரசு, தங்களின் தவறான உள் இடஒதுக்கீட்டு கொள்கையை கைவிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இடஒதுக்கீட்டை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
பட்டியலின பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் எவ்வித பிரிவும் செய்யக்கூடாது என்பது, ஒரு சிலரின் வாதம். அதற்குள் நான் செல்லவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, எந்தவொரு ஜாதிக்கும் முன்னுரிமை கொடுக்காமல், முறையாக பிரித்து தர வேண்டும் என்பதற்காக, தெலுங்கானா அரசு, ஏ, பி, சி என, மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.
இதில், எந்த ஜாதிக்கும் முன்னுரிமையும் இல்லை; உள்ஒதுக்கீடும் இல்லை. இருக்கும் சதவீதத்தை மூன்றாக பிரித்து வழங்கி உள்ளனர். தெலுங்கானாவை பார்த்தாவது, தமிழக அரசு தங்களின் தவறான உள் இடஒதுக்கீட்டு கொள்கையை கைவிட்டு விட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இடஒதுக்கீட்டை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

