நகை கடனுக்கான ரிசர்வ் வங்கி விதிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது
நகை கடனுக்கான ரிசர்வ் வங்கி விதிகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது
ADDED : மே 29, 2025 11:51 PM
சென்னை:''நகை கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் விதிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்துவதில்லை. ஏற்கனவே, கூட்டுறவு நிறுவனங்களில் 60,000 கோடி ரூபாய்க்கு நகை கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில், நான்கு தளங்களுடன், 19,464 சதுர அடியில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்பட உள்ளது. திட்டச் செலவு 8 கோடி ரூபாய். இதன் பூர்வாங்க பணியை, அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இந்த புதிய கட்டடத்தில் வங்கி கிளை, ஏ.டி.எம்., வசதி, பல்பொருள் அங்காடி, ரேஷன் கடைகள் திறக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில், 1.10 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில், 17,000 கோடி பயிர் கடன் வழங்கப்படும். நகை கடன் வழங்குவதில், ரிசர்வ் வங்கியின் விதிகள், கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது; ஏழை மக்கள், விவசாயிகளை பாதிக்கும்.
முதல்வர் மருந்தகங்களுக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகை கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் விதிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பொருந்துவதில்லை; எதிர்காலத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே தான், விதிகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கியை, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, 60,000 கோடி ரூபாய்க்கு நகை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கியின் விதியால், கூட்டுறவு சங்கங்களுக்கு புதிதாக நகை கடன் வாங்க யாரும் முன்வந்தால், கூடுதலாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.