குவாரிகளே இல்லாமல் மணலுக்கு முன்பதிவா? 'என்னால் இதில் எதுவும் செய்ய முடியாது'
குவாரிகளே இல்லாமல் மணலுக்கு முன்பதிவா? 'என்னால் இதில் எதுவும் செய்ய முடியாது'
ADDED : டிச 12, 2024 01:07 AM

சென்னை : ஆற்று மணல் வாங்குவதற்காக, 'ஆன்லைன்' முறையில் முன்பதிவு செய்ய, வாரத்துக்கு, 9 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'குவாரிகளே இயங்காத நிலையில், இது எப்படி சாத்தியம்?' என, லாரி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட இடங்களில், ஆற்று மணல் குவாரிகள் திறக்க, நீர்வளத் துறைக்கு அனுமதி கிடைத்தது.
இதில், 10 இடங்களில் மட்டுமே குவாரிகள் திறக்கப்பட்டன. இந்த குவாரிகளில் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள், முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. அமலாக்கத் துறை விசாரணை காரணமாக, இந்த குவாரிகளும் மூடப்பட்டன.
இதனால், கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. குவாரிகள் செயல்படாத நிலையில், கடந்த சில வாரங்களாக, ஆன்லைன் முறையில் மணலுக்கு முன்பதிவு செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'வெள்ளிக் கிழமைகளில் காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, மணல் வாங்க பொது மக்கள் முன்பதிவு செய்யலாம்; மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்யலாம்' என, ஆன்லைன் மணல் விற்பனைக்கான இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் குவாரிகளே இயங்காத நிலையில், ஆன்லைன் முறையில் மணல் விற்பனைக்கு எப்படி முன்பதிவு நடக்கிறது என, கேள்வி எழுந்துள்ளது.
இப்படி ஒரு உத்தரவு வெளியாகி உள்ளதே எனக் கருதி, அந்த இணையதளத்தில் முன்பதிவு செய்ய முயன்றால், 'தொழில்நுட்ப கோளாறு' என, முன்பதிவு மறுக்கப்படுவதாக, கட்டுமான துறையினர் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தமிழக மணல், 'எம்-சாண்ட்' லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல கூட்டமைப்பு தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தற்போது, எந்த இடத்திலும் மணல் குவாரிகள் செயல்படவில்லை. அதேநேரம், கிராவல் மண் எடுப்பதற்கான அனுமதியை பயன்படுத்தி, சிலர் ஆற்று மணல் எடுத்து, கள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
குவாரிகளே செயல்படாத நிலையில், ஆன்லைன் விற்பனையில் அறிவிக்கப்படும் நேர கட்டுப்பாடு புதிராக உள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி உள்ள இடங்களில், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகம் முழுதும் மணல் விற்பனையை சார்ந்து இருக்கும், 50,000 லாரி உரிமையாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் நலன் கருதி, இந்த கோரிக்கையை, அமைச்சர் துரைமுருகனிடம் கூறியுள்ளோம்.
'என்னால் எதுவும் முடியாது; முதல்வரை சந்தித்து பேசுங்கள்' என்று, அவர் கூறி விட்டார். முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு, ஜூலையில் இருந்து முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.