வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் சட்டசபையில் முதல்வருடன் வானதி விவாதம்
வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் சட்டசபையில் முதல்வருடன் வானதி விவாதம்
ADDED : மார் 28, 2025 03:01 AM

சென்னை:மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
பா.ஜ., - வானதி: திருநெல்வேலி படுகொலை, வக்பு வாரிய சொத்துக்காக நடந்தது.
வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்வதிலும், அதில் வெளிப்படை தன்மை இருப்பதை உறுதி செய்யவும், அந்த நிர்வாகத்தில்இஸ்லாமியர்களுடன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், பெண்கள் இடம் பெற வேண்டும் என்ற சீர்திருத்த எண்ணத்துடனும், சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
சட்ட அமைச்சர் ரகுபதி: வானதி வழக்கறிஞர்; சட்டம் தெரிந்தவர். ஒரு மதத்திற்கு உரிய அடையாளமாக கருதப்படும் வாரியத்தில், இன்னொரு மதத்தை சேர்ந்தவரை புகுத்துவது, எந்த வகையில் நியாயம்? இதுவரை வக்பு வாரியமுடிவுகள் இறுதியானதாக இருந்தன.
மாவட்ட கலெக்டர்கள் தீர்ப்பு தான் இறுதியானது என்று சட்ட திருத்தம் சொல்கிறது.
இதனால், அரசின் கட்டுப்பாட்டில் வக்பு வருகிறது. சட்டத்தில் செய்யப்பட்டுள்ள, 115 திருத்தங்கள் வாயிலாக, அதை நீர்த்து போக செய்து, இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிக்கப்படும். மத ரீதியாக, உணர்வு ரீதியாக, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களை, பொருளாதார ரீதியாக பாதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வானதி: வக்பு வாரிய சட்ட திருத்தம் தொடர்பான விவாதம் என்றால், என்னால் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் அளிக்க முடியும். முதல்வரின் தீர்மானம் என்பதால், பதில் சொல்வதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும்.
வக்பு வாரிய சொத்து முறைகேடுகள் தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைத்த புகார்களை தொடர்ந்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசு, தன் அதிகாரங்களை பயன்படுத்தி, சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
பார்லிமென்ட் கூட்டு குழுவில் மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதிகள், சமுதாயத்தின் பல்வேறு கருத்துக்களை கேட்டு, சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, சட்ட வரம்பிற்கு உட்பட்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம்.
அமைச்சர் ரகுபதி: தவறான கருத்துக்களை வானதி பதிவு செய்கிறார். கருத்து கேட்ட போது பெறப்பட்ட ஆட்சேபனைகளை துாக்கி போட்டு விட்டு, சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளனர். ஆட்சேபனைகளுக்கு ஒரு பதில் கூட தரவில்லை.
வானதி: கருத்து சொல்லும் போது, இத்தனை குறுக்கீடு வருகிறது.
சபாநாயகர் அப்பாவு: குறுக்கீடு என்று சொல்லக்கூடாது, தவறான தகவல்களுக்கு சரியான பதில் சொல்லியுள்ளார்.வானதி: ஜனநாயக முறைப்படி சட்டசபையை நடத்துவதற்கும், சட்டங்களை கொண்டுவருவதற்கும் தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர். அதேபோல, மத்திய அரசுக்கும் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ளனர்.
அமைச்சர் ரகுபதி: எல்லாரையும் வெளியேற்றி விட்டு, சட்டத்திருத்தம் கொண்டுள்ளனர். எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர். அதை கேள்வி கேட்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.
முதல்வர் ஸ்டாலின்: கூட்டு குழுவில், தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு விவாதத்தில் பேச, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், அவர் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும். இதுதான் ஜனநாயகம்.
வானதி: முதல்வருக்கு நன்றி. இந்த சட்டத்திருத்த மசோதா தொடர்பாக, தனியாக விவாதம் நடத்த வேண்டும். பார்லிமென்டில் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.,வினரும் குரலை பதிவு செய்யலாம்.
முதல்வர்: அதைதான் குறிப்பிட்டேன். இங்கே உங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அங்கு எங்களை அனுமதிக்கவில்லை.
வானதி: ஒரு தீர்மானத்தை கொண்டு வரும் போது, அதன் செயலாக்க தன்மையை யோசிக்க வேண்டும். மாநில அரசுக்கு, அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, மத்திய அரசுக்கும் இருக்கிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு எதிரான தீர்மானத்தை பா.ஜ., ஏற்கவில்லை. நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.