பா.ம.க., நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்வார்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
பா.ம.க., நிறுவனர், தலைவராக ராமதாஸ் தொடர்வார்; பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
UPDATED : ஆக 18, 2025 08:56 AM
ADDED : ஆக 18, 2025 01:41 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பட்டானுாரில் நேற்று நடந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தரப்பு பொதுக்குழு கூட்டத்தில், அவரே கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் தொடர்வார் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதலாக உருவெடுத்தது. கடந்த ஏப்ரலில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். அதை ஏற்க மறுத்த அன்புமணி, கட்சியினர் தன்னை தேர்ந்தெடுத்ததாகவும், அதை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளதாகவும் கூறி, தானே பா.ம.க., தலைவராக தொடர்வதாக அறிவித்தார்.
பேச்சு தோல்வி
அதை தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், பதிலுக்கு தந்தை ஆதரவாளர்களை நீக்குவதாக அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்தது. இருவரையும் சமாதானப்படுத்த நடந்த பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.
கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, ஆகஸ்ட் 17ல் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என ராமதாஸ் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக, ஆக., 9ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி அறிவித்தார்.
அதன்படி, கடந்த 9ம் தேதி மாமல்லபுரத்தில், அன்புமணி தலைமையில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ராமதாசுக்கு தனி நாற்காலி ஒதுக்கப்பட்டு, அதில் துணி போடப்பட்டு இருந்தது; ஆனால், ராமதாஸ் பங்கேற்கவில்லை. 'பா.ம.க., தலைவராக அடுத்த ஓராண்டுக்கு அன்புமணி தொடர்வார்' என, அந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, 'அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதமானது. அன்புமணி தன்னைத் தானே தலைவராக அறிவித்துக் கொண்டது கட்சி விதிகளின்படி செல்லாது' என, தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதினார்.
ஒப்புதல் பெற முயற்சி
இந்நிலையில், ராமதாஸ் தரப்பு பொதுக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் பட்டானுாரில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ராமதாஸ் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக, கடந்த மே 30ம் தேதியில் இருந்து செயல்படுகிறார்; அதை, பொதுக்குழு அங்கீகரிக்கிறது. இப்பொறுப்பில் அவர் தொடர்ந்து செயல்படுவார் என்பது உட்பட, 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு ஒப்புதலுடன், பா.ம.க., அமைப்பு விதி, 35 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விதி, பா.ம.க.,வின் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரத்தை ராமதாசுக்கு மட்டுமே வழங்கி உள்ளது. அத்துடன், பா.ம.க., சார்பில் தேர்தலில் போட்டியிடுவோருக்கு, கட்சி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்பதை, தான் கூட்டிய பொதுக்குழு வாயிலாக ராமதாஸ் வெளிப்படுத்தி உள்ளார். இரு தரப்பினரும் பொதுக்குழு கூட்டிய நிலையில், தந்தை - மகன் மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இருவர் கூட்டிய பொதுக்குழுவில் தேர்தல் கமிஷன் எதை அங்கீகரிக்கிறதோ, அவர்கள் கையில் கட்சி செல்லும். எனவே, இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
- நமது நிருபர் -