'மாநில பிரச்னைகளை தீர்த்து வையுங்கள்' : அறிக்கை குழுவிடம் வியாபாரிகள் 'செக்'
'மாநில பிரச்னைகளை தீர்த்து வையுங்கள்' : அறிக்கை குழுவிடம் வியாபாரிகள் 'செக்'
ADDED : மார் 04, 2024 06:08 AM
தமிழகத்தில் உள்ள மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென, தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி, கடலுார், சிதம்பரம், பெரம்பலுார் மற்றும் புதுச்சேரி லோக்சபா தொகுதிகளின் மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.
தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில் குழுவினர் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது, விழுப்புரம் மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அதில், தமிழக அரசு அமல்படுத்திய மின் கட்டண உயர்வால், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண அளவீடு பணியை, மாதம் தோறும் என மாற்றியமைக்க வேண்டும்.
சொத்துவரி உயர்வால், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
விழுப்புரம் உட்பட ஒரு சில நகரங்களில் மட்டும், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களுக்கு, நகராட்சி சார்பில் நிறைவு சான்று மறுக்கப்படுகிறது.
இதனால், நிரந்தர மின் இணைப்பு பெற முடியாமல் கட்டட உரிமையாளர்கள் வேதனைப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனை கவனித்த தேர்தல் அறிக்கை குழுவினர், 'கோரிக்கைகள் அனைத்தும் மாநில அரசு தீர்க்க வேண்டியதாக உள்ளது. மத்திய அரசிற்கான ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பிரச்னைகள் ஏதும் இடம்பெறவில்லையே' எனக் கேட்டனர்.
உடனே வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், 'மாநிலத்தில் தி.மு.க., ஆட்சி உள்ளதால், பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். மத்தியில் மாற்று ஆட்சி அமைந்தவுடன், தேசிய பிரச்னைகள் குறித்து மனு அளிக்கிறோம்' என்றனர்.
- சிறப்பு நிருபர்-

