மக்களுடன் முதல்வர் முகாமில் 35 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு
மக்களுடன் முதல்வர் முகாமில் 35 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு
ADDED : பிப் 04, 2024 05:13 AM

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில், 35 ஆண்டுகளாக பட்டா மாற்றம் செய்ய முடியாமல் தவித்த விவசாயி நிலத்திற்கு, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வழியே, பட்டா மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா, மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், விவசாயி. இவர் 1988ம் ஆண்டு மாரிமுத்து என்பவரிடம், 21 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, பல ஆண்டுகளாக முயற்சித்தும் முடியவில்லை.
கடந்த 2018 ஏப்ரல் 18ல், மக்கள் நேர்காணல் முகாம், மாங்குடியில் நடந்தது. அந்த முகாமில் பட்டா மாற்றம் கோரி மனு கொடுத்தார். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை.
தற்போது முதல்வர் அறிவித்த, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ், கடந்த மாதம் 20ம் தேதி மாங்குடி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
இம்முகாமிலும் உரிய ஆவணங்களுடன், பட்டா மாற்றம் கோரி சந்திரசேகரன் விண்ணப்பித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு, நேற்றுமுன்தினம் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, கும்பகோணம் தாலுகா அலுவலகம் இணைய சேவை வழியே வெளியிடப்பட்டது.
இது விவசாயி சந்திரசேகரனிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.