ADDED : அக் 22, 2024 02:28 AM
சென்னை: தகவல் ஆணையம் வாயிலாக தெரிவிக்கப்பட்ட, 2,494 மனுக்களுக்கு, நவம்பர், 18க்குள் பதில் அளிக்க வேண்டும்' என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை புலனாய்வு பிரிவுக்கான கூடுதல் ஐ.ஜி., பிறப்பித்துள்ள உத்தரவு:
தகவல் ஆணைய சீராய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியதன் அடிப்படையில், 2,494 தகவல் உரிமை சட்ட மனுக்கள் குறித்த விபரங்கள் வந்துள்ளன.
இந்த மனுக்களின் பிரதிகள், மண்டலம், பதிவு மாவட்டம், சார் - பதிவாளர் அலுவலகம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன.
இவற்றை முழுமையாக படித்து கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமை சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, உரிய பதில்களை, சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு பொது தகவல் அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.
நவ., 18க்குள் இந்த மனுக்களுக்கு பதில் அளித்து, அது குறித்த ஒப்புகையும் பெற்று, அந்த ஆதாரங்களை, மாநில தகவல் ஆணையத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
இந்த பதில்களின் ஒரு பிரதியை, பதிவு அஞ்சல் வாயிலாகவும் தகவல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதை, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.