'ஈ.வெ.ரா., குறித்த சீமான் பேச்சுக்கு தேர்தலுக்கு பின் பதில்'
'ஈ.வெ.ரா., குறித்த சீமான் பேச்சுக்கு தேர்தலுக்கு பின் பதில்'
ADDED : ஜன 28, 2025 06:14 AM

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாருக்காக, தனியொரு அமைச்சராக பிரசாரம் செய்து வருகிறார், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி.
பிரசாரத்துக்கு நடுவே அவர் அளித்த பேட்டி: பிரசாரத்தின்போது மகளிர் உரிமைத்தொகை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்கக்கோரி வாக்காளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதிக அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வந்தால், நிறைய அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வந்துள்ளனரே என எதிர்தரப்பில் கொந்தளிப்பர்.
அதனால், இம்முறை தேவையில்லை என முடிவெடுத்து, பிரசாரத்துக்கு அமைச்சர்களை குறைத்து விட்டோம். ஆனால், அதையே கேள்வியாக எழுப்புகின்றனர். உள்ளூரில் இருக்கும் அமைச்சர்கள் பிரசாரம் செய்தால் போதும் என தலைமை அறிவுறுத்தி விட்டது. அந்த வகையில்தான் நான் பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளேன்.
தமிழக அரசின் தொடர் திட்டங்களின் பலனை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களும் அதிக அளவில் அனுபவித்துள்ளனர். அதனால், இம்முறையும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
மற்றபடி ஈ.வெ.ரா., குறித்து சீமான் வாயில் வந்ததையெல்லாம் பேசி வருகிறார். அவர் என்ன பேசினாலும், அதற்கு தேர்தலுக்குப் பின் பதில் சொல்வோம். மக்கள், அவருக்கு தேர்தல் வாயிலாக பதிலளிக்க காத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.