புதிய படங்களை விமர்சிக்க கட்டுப்பாடு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
புதிய படங்களை விமர்சிக்க கட்டுப்பாடு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ADDED : டிச 03, 2024 11:57 PM
சென்னை:'சினிமா விமர்சனம் என்ற பெயரில் அவதுாறு செய்தால், போலீசில் புகார் அளிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர், டி.சிவலிங்கம் தாக்கல் செய்த மனு:
புதிதாக திரைக்கு வரும் படங்கள் குறித்து, 'யு டியூப்' சானல்களில் விமர்சிக்கின்றனர். அதுவும் படம் வெளியாகும் நாளில், தியேட்டர்களில் இருந்தும், தியேட்டர் வளாகத்தில் இருந்தும், பார்வையாளர்களிடம் பேட்டி கண்டு ஒளிபரப்புகின்றனர்.
கோடிக்கணக்கில் முதலீடு செய்து திரைப்படங்களை தயாரிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, 80 சதவீத படங்களை ஓ.டி.டி., தளங்களுக்கும், சாட்டிலைட் சானல்களுக்கும் விற்பனை செய்ய முடியவில்லை.
எதிர்மறையான பட விமர்சனங்களால், வசூலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. தியேட்டர்களில் படம் நன்றாக ஓடினால் மட்டுமே, ஓ.டி.டி., மற்றும் சாட்டிலைட் சானல்களில் படங்களை வெளியிட ஆர்வம் காட்டுவர்.
சமீப காலங்களில், 'யு டியூப் சானல்கள்' மற்றும் சமூக வலைதளங்களில், எதிர்மறையான பட விமர்சனங்களால், சினிமா வர்த்தகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
எனவே, படம் வெளியாகி மூன்று நாட்கள் வரை, சமூக வலைதளங்கள், யு டியூப் சானல்களில் புதிய படம் குறித்த விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
தியேட்டர் வளாகத்தில் பொது மக்களின் கருத்துக்களை பதிவு செய்ய, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
புதிய திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி சவுந்தர் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ''புதிய படங்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்களால், படம் பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுகிறது. நடிகர், இயக்குநருக்கு எதிராகவும் அவதுாறு பரப்பப்படுகிறது,'' என்றார்.
இதையடுத்து, சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுவதாகவும், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, அவதுாறு பரப்பினால் போலீசில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.
மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுகள் மற்றும் யு டியூப் நிறுவனத்துக்கும், நீதிபதி உத்தரவிட்டார்.