சட்டசபை அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும்; ஓய்வு கோயில் ஊழியர் கோரிக்கை
சட்டசபை அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும்; ஓய்வு கோயில் ஊழியர் கோரிக்கை
ADDED : நவ 23, 2024 05:30 AM
மதுரை; ஓய்வுபெற்ற கோயில் ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம், பொங்கல் கருணைத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன் மாநில சிறப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, சட்டசபையில் கடந்தாண்டு ஏப்.19ல் ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். பொங்கல் கருணைத்தொகை ரூ.1000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி 2023 ஜூன் 22 முதல் ஓய்வூதியம் உயர்வும், பொங்கல் கருணைத்தொகை ரூ.1000ம் ஓய்வூதியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. குடும்ப ஓய்வூதியர்களுக்கு கருணைத்தொகை வழங்கவில்லை. இதுகுறித்து கமிஷனருக்கு பலமுறை விண்ணப்பித்தும் பலனில்லை.
தற்போதுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2500ம், பொங்கல் கருணைத்தொகை 2025ம் ஆண்டிற்கு ரூ.1000 வழங்கவும் அரசை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கோ, அறநிலையத்துறைக்கோ நிதிச்செலவு இல்லை. இது அரசு சாரா நிதிச்செலவினமாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.