மொழி மாற்றம் செய்யாமல் பட்டா விபரங்களை பாருங்கள் வருவாய்த்துறை அறிவுரை
மொழி மாற்றம் செய்யாமல் பட்டா விபரங்களை பாருங்கள் வருவாய்த்துறை அறிவுரை
ADDED : பிப் 19, 2025 12:12 AM
சென்னை:'இணையவழியில் பட்டா விபரங்களை பார்ப்போர், கணினியில் மொழி மாற்றம் செய்ய வேண்டாம்' என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கின்றனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பட்டா, நில அளவை வரைபடம் போன்றவை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
வருவாய் த் துறையின், இ - சேவைகள் இணையதளத்தில், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் விபரங்களை உள்ளீடு செய்து, பட்டா விபரங்களை பார்க்கலாம்.
இந்த இணையதளத்தில் பெறப்படும் பட்டாக்களில், பெயர் தொடர்பாக பிழைகள் அதிகமாக காணப்படுவதாக புகார்கள் வந்தன. தங்களுக்கான பட்டாவில் உரிமையாளர் பெயர், கிராம பெயர் உள்ளிட்ட விபரங்களில் பிழைகள் இருப்பதால், அதை சரி செய்யக்கோரி, மக்கள் தாலுகா அலுவலகத்தை அணுகுகின்றனர்.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பட்டாவில் பெயர் தொடர்பான பிழைகள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டன. பொது மக்கள் அளித்த ஆவண பிரதியை, இணையதளத்தில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தோம். இ - சேவைகள் இணையதளத்தில் நில விபரங்கள், 'யூனிகோடு' தமிழ் எழுத்துருவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதில், விபரம் தெரியாமல், சிலர் தங்கள் கணினி பிரவுசரில் மொழிபெயர்ப்பு விருப்பத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் ஏற்படும் குழப்பத்தால், பட்டாவில் பெயர்கள் பிழையாக இருப்பது போன்று தெரிகிறது. எனவே, மொழிபெயர்ப்பு விருப்பத்தை தேர்வு செய்யாமல், இந்த விபரங்களை பார்த்தால் சரியான தகவல்கள் கிடைக்கும்.
இதன் பின்னும் பிழைகள் தெரியவந்தால், அது குறித்து புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.