ADDED : மே 29, 2025 11:42 PM

சென்னை:''கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், ஜூலை 3ல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க தலைவர் முருகையன் தெரிவித்தார்.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில், சென்னை எழிலக வளாகத்தில் நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் கூறியதாவது:
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு கட்ட போராட்டம் நடத்த உள்ளோம்.
முதல்கட்ட போராட்டத்தை ஒட்டி, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் துறை செயலரிடம், 38 மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மனு அளித்தோம்.
எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், ஜூலை 3ம் தேதி மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
தற்போது வருவாய் துறையில் 2,000க்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்கள், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து நிரப்பப்படாமல் உள்ளன.
இடங்களை நிரப்ப இரண்டு முதல்வர்கள் ஆணையிட்டும், உயர் அதிகாரிகள் அதை பின்பற்றவில்லை. இதனால் ஊழியர்களுக்கு கடும் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், 2023ல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
துறையுடன் தொடர்பில்லாத பணிகளை ஊழியர்களிடம் திணிப்பதையும் உடனடியாக கைவிட வேண்டும். எங்கள் போராட்டம், தமிழகமே அதிரும் அளவில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.