மனைப்பிரிவுகளுக்கு ஒட்டுமொத்தமாக உட்பிரிவு ஏற்படுத்த வருவாய் துறை திட்டம்
மனைப்பிரிவுகளுக்கு ஒட்டுமொத்தமாக உட்பிரிவு ஏற்படுத்த வருவாய் துறை திட்டம்
UPDATED : ஜூலை 17, 2025 04:56 AM
ADDED : ஜூலை 17, 2025 12:22 AM

சென்னை:மனைப்பிரிவு திட்டங்களில், ஒட்டு மொத்தமாக உட்பிரிவுகள் உருவாக்கும் வழிமுறைகளை, வருவாய் துறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் அமலுக்கு வரும்போது, மனைகளை வாங்குவோர், தனித்தனியாக உட்பிரிவு செய்ய, அலைய வேண்டிய நிலை ஏற்படாது.
தமிழகத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிலங்களை மொத்தமாக வாங்கி, வீட்டு மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன. நகர், ஊரமைப்பு துறை அங்கீகாரம் அளிக்கும்போது, அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த வரைபடத்தில், நிலத்தின் சர்வே எண், நீளம், அகலம், சாலை அகலம், ஒவ்வொரு மனைக்கான அடையாள எண் அல்லது வரிசை எண் இடம்பெறும்.
இந்த விபரங்கள் அடிப்படையில், மனை விற்பனைக்கான கிரைய பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.
அதன்பின் மனை வாங்கியவர்கள், தனித்தனியாக தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து, சர்வேயர் மூலமாக நிலத்தை அளந்து, உட்பிரிவு உருவாக்க வேண்டும். இதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட மனைப்பிரிவு திட்டத்தில் மனை வாங்கியவர்கள், வெவ்வேறு சமயத்தில் விண்ணப்பிப்பதால், நில அளவை பணி தனித்தனியாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஒரு மனைப்பிரிவில், சிலர் பெயருக்கு உட்பிரிவுடன் பட்டா இருக்கும்,
சிலருக்கு பழைய பெயரில் பட்டா இருக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வாக, மனைப் பிரிவுகளில் ஒரே நேரத்தில், நில அளவை செய்து, ஒட்டுமொத்தமாக உட்பிரிவுகள் உருவாக்க, வருவாய் துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுவாக மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அங்கீகாரம் பெற்ற பிறகு, விற்பனையில் மட்டும் கவனம் செலுத்துகின்றன.
இந்நிறுவனங்கள் அங்கீகாரம், ரியல் எஸ்டேட் ஆணையப் பதிவு, வழிகாட்டி மதிப்பு பணிகளுடன் சேர்த்து, உட்பிரிவு உருவாக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மனைப்பிரிவுகள் உருவாக்கும் நிலையிலேயே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நில அளவை துறையை அணுக வேண்டும். அப்படி அணுகினால், ஒரே முறையில் அனைத்து மனைகளையும் அளந்து, ஒவ்வொரு மனைக்கும், உட்பிரிவு எண்கள் வழங்க முடியும்.
அந்த எண் அடிப்படையில், மனை விற்பனைக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டால், அதை வாங்குவோருக்கு, எவ்வித பிரச்னையும் இல்லாமல், உடனடியாக பட்டா பெயர் மாறுதல் செய்ய முடியும்.
இது தொடர்பான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. விரைவில், இதற்கான நடைமுறை அமலுக்கு வரும். அதன்பிறகு மனை வாங்கும் மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.