ADDED : ஜூன் 25, 2025 12:09 AM

சென்னை:'வருவாய் துறையை சிறப்பு துறையாக அறிவித்து, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது.
சென்னை எழிலகத்தில் நடந்த போராட்டத்தில், பல மாவட்டங்களை சேர்ந்த வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்றனர். போராட்டம் குறித்து, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகேந்திர குமார் கூறியதாவது:
வருவாய் துறையை சிறப்பு துறையாக அறிவிக்க வேண்டும், இதில் பணியாற்றுவோருக்கு, தலைமைச் செயலக ஊழியர்களுக்கு வழங்குவது போன்ற ஊதியத்தை வழங்க வேண்டும். வருவாய் துறை அலுவலகங்களில், ஏற்கனவே பணிபுரிந்த அலுவலர்களின் பணியிடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசு பணியிடங்களை உயர்த்தவில்லை.
இதனால், பணிவரன்முறை 15 ஆண்டுகளாக காலதாமதமாகி உள்ளது. இதை நிறைவேற்ற வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சாலை விபத்தில் இறந்த வி.ஏ.ஓ.,க்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், மாநிலம் முழுதும் போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.