திருத்தப்பட்ட பி.எல்.ஐ., திட்டம் ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்
திருத்தப்பட்ட பி.எல்.ஐ., திட்டம் ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்
ADDED : அக் 13, 2025 11:00 PM

திருப்பூர் : ''உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டமான பி.எல்.ஐ.,யில் திருத்தம் செய்துள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி வேகமாக அதிகரிக்கும்'' என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு, 2021ம் ஆண்டு பி.எல்.ஐ., திட்டத்தை அறிவித்தது. அதிகபட்சம், 60 சதவீதம் வரை மானியம் பெறும் வாய்ப்பு உருவானது. திட்ட விதிமுறைகள் கடுமையாக இருந்ததால், மிகக்குறைந்த நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்தன.
விதிமுறைகளை தளர்த்துவதுடன், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழிலையும் இணைக்க வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர். அதன்படி, பி.எல்.ஐ., திட்டத்தில் புதிய திருத்தம் செய்து அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, முதல் திட்டத்தின் முதலீடு, 300 கோடி ரூபாய் என்பது, 150 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 'பி.எல்.ஐ.,- 2.0' திட்ட முதலீடு 100 கோடி என்பது, 50 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது; அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வர்த்தக வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறுகையில், ''புதிய தொழில் துவங்குபவருக்கு மட்டுமே இத்திட்டம் கைகொடுத்து வந்தது. தற் போது, ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனம், புதிய யூனிட் துவக்கவும் மானியம் கிடைக்குமென அறிவித்துள்ளது. புதிய ஜவுளி பொருட்களும் இணைக்கப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை மற்றும் தொழில்நுட்ப ஆடை உற்பத்தி வேகமாக வளர்ச்சி பெறும். இதன் மூலம் ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரிக்கும்,'' என்றார்.

