காற்று மாசு கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனைக்கு சன்மானம் அறிவிப்பு
காற்று மாசு கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனைக்கு சன்மானம் அறிவிப்பு
ADDED : அக் 10, 2025 10:55 PM
புதுடில்லி:'டில்லியில் நிலவும் மோசமான காற்று மாசை தவிர்க்கும் வழிமுறைகளை தெரிவிக்கும் நிறுவனங்கள், தனியாருக்கு, 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என, அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
டில்லியில் நிலவும் காற்று மாசு, மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது; பட்டாசுகள் வெடிக்கவும் தடை உள்ளது.
எனினும், காற்று மாசு குறைந்தபாடில்லை. காற்று மாசு படுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா நேற்று நிருபர்களிடம் கூறும் போது,''டில்லியில் நிலவும் மாசுவை கட்டுப்படுத்த தேவையான, சிறந்த ஆலோசனைகளுக்கு, 50 லட்ச ரூபாய் வரை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான முயற்சியில் தனிநபர்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் போன்றவை ஈடுபடலாம்,'' என்றார்.