ADDED : ஜன 02, 2024 10:25 PM
சென்னை:நெல் உற்பத்தி குறைவு மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக, அரிசி விலை திடீரென உயர்ந்து வருவது, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், நெல் உற்பத்தியாகிறது.
தென் மாநிலங்களில் உற்பத்தியாகும் நெல், தமிழகத்தில், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆலைகளுக்கு எடுத்து வரப்பட்டு, அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.
முன்பு, 25 கிலோ மூட்டைகளில் அரிசி விற்பனையானது. மத்திய அரசு, ஜி.எஸ்.டி., வரியை 5 சதவீதம் உயர்த்தியதால், 26 கிலோ மூட்டைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யாதது இதற்கு காரணம்.
தமிழக அரிசி ஆலைகளில், உற்பத்தியாகும் அரிசி, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால், தேவை அதிகரித்து அரிசி விலை உயர்ந்து வருகிறது. மூட்டைக்கு 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு பிறகு விலை குறையும்
போதிய விளைச்சல் இல்லாததால், அரிசி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பெய்த மழையால், புதிதாக சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் நெருங்குவதால், பச்சரிசி விலை உயர்ந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின் அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரிக்கும். அதன்பின் அரிசி விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
- அசோக்,
அரிசி வியாபாரி, கோயம்பேடு மளிகை மொத்த விற்பனை சந்தை
விலை மேலும் உயரும்!
தமிழக அரிசி ஆலைகளில், அரவைக்கு தேவையான நெல் இருப்பு குறைவாக உள்ளது. பொதுவாக 10,000 முதல் 15,000 மூட்டை நெல் கையிருப்பு வைத்திருப்பர். தற்போது 3,000 அல்லது 4,000 நெல் மூட்டைகள் கையிருப்பு உள்ளன. வட மாநிலங்களிலும் இதே நிலை தான். மோட்டா ரக அரிசி, அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சம்பா பருவம் என்பது அக்., முதல் ஜனவரி வரை. இப்பருவத்தில் டெல்டா மாவட்டங்களில், விளைச்சல் அதிகம் இருக்கும். இம்முறை, மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. பயிர் சேதம், ஏற்றுமதி, நெல் இருப்பு குறைவு போன்ற காரணங்களால், அரிசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- முனுசாமி,
அரிசி ஆலைகளின் ஆலோசகர், காஞ்சிபுரம்
அரிசி விலை நிலவரம்
அரிசி ரகம் (26 கிலோ) பழைய விலை புதிய விலை(ரூபாய்)
பொன்னி புழுங்கல் புதியது 800-1,100 850-1,150
பொன்னி புழுங்கல் பழையது 1,000-1,500 1,050-1,550
பொன்னி பச்சரிசி 1,000-1,400 1,050-1,450
இட்லி அரிசி 900-1,000 950-1,050