ADDED : பிப் 01, 2024 12:36 AM
சென்னை:தமிழகத்தில் விளைச்சல் பாதிப்பால், புழுங்கல் அரிசி, பச்சரிசி விலை கிலோவுக்கு, 3 முதல், 4 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கடந்த, 20 நாட்களுக்கு முன், 26 கிலோ எடை உடைய பொன்னி பழைய புழுங்கல் அரிசி மூட்டை, 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வாரம் அதன் விலை, 1,400 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன்படி, கிலோவுக்கு அரிசி விலை, 4 ரூபாய் முதல், 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில், 26 கிலோ எடை உடைய பச்சரிசி மூட்டை விலை, 1,450 ரூபாயில் இருந்து, 1,525 ரூபாயாக அதிகரித்துள்ளது. பச்சரிசி கிலோவுக்கு, 3 ரூபாய் உயர்ந்துள்ளது. இதுதவிர, 30 கிலோ எடை உடைய பாசுமதி அரிசி விலை, 3,600 ரூபாயில் இருந்து, 3,700 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பூண்டும் அதிகரிப்பு
தமிழக மொத்த விலை சந்தைகளுக்கு, ம.பி., மாநிலத்தில் இருந்து தினமும் லாரிகளில் பூண்டு எடுத்து வரப்படுகிறது. தமிழகத்திலும் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைகளில் கடந்த வாரம், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட கிலோ பூண்டு தற்போது, 350 ரூபாயாக உயர்ந்துள்ளது.