sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை

/

ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை

ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை

ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை

3


UPDATED : ஏப் 09, 2024 03:51 PM

ADDED : ஏப் 09, 2024 03:43 PM

Google News

UPDATED : ஏப் 09, 2024 03:51 PM ADDED : ஏப் 09, 2024 03:43 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கலைத்துறை மற்றும் அரசியலில் சிறப்பாக பங்காற்றிய ஆர்எம் வீரப்பன், 98 வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்கலாம்

பயோகிராபி


பெயர் : இராம வீரப்பன்

சினிமா பெயர் : ஆர் எம் வீரப்பன்

பிறப்பு : 09-09-1926

இறப்பு : 09-04-2024

பெற்றோர் : ராமசாமி - தெய்வானை

பிறந்த இடம் : வல்லத்திராக் கோட்டை - அறந்தாங்கி - புதுக்கோட்டை மாவட்டம் - தமிழ்நாடு

மனைவி : ராசம்மாள்

குழந்தைகள் : வீ தமிழழகன் (மகன்) - செல்வி தியாகராஜன் (மகள்) உட்பட 3 மகன்கள், 3 மகள்கள்

கலை - அரசியல் ஆர்வம்


நாடகத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து ஆளுமை செய்த வெகு சிலரில் குறிப்பிடும்படியான ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து மாபெரும் வெற்றி கண்டவரான இவர், பள்ளிப் பருவத்திலேயே கலைத் துறையின் மீது ஆர்வம் கொண்டு படிப்பை பாதியிலேயே நிறுத்தி 'டி.கே.எஸ் நாடகக் குழு'வில் தன்னை இணைத்துக் கொண்டு நடிப்பதோடு மட்டுமின்றி, நாடக நிர்வாகப் பணியையும் கவனித்து வந்தார்.

மேலாளர்


இடையிடையே திராவிட தலைவர்களின் அறிமுகம் கிடைத்து அவர்களோடு பழகும் வாய்ப்பினை பெற்றதால் அரசியல் ஆர்வமும் அவரை தொற்றிக் கொண்டது. கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணா நாடக சபாவில் சிறிதுகாலம் பணிபுரிந்து வந்த போது, மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் அறிமுகம் கிடைத்து, அவர் மூலம் எம்.ஜி.ஆரின் நட்பும் கிடைக்கப் பெற்றார். பின்னர் அண்ணாதுரையின் அறிவுறுத்தலின் படி எம்ஜிஆர் நாடக மன்றத்தின் மேலாளராக பணியமர்த்தப்பட்டார்.

எம்ஜிஆர் விசுவாசி


1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சொந்தமாக 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்ற படக் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து, 'நாடோடி மன்னன்' என்ற திரைப்படத்தை தயாரித்த போது, அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் தயாரித்த 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய திரைப்படங்கள் வரை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் முக்கியமானவராக இருந்தார் ஆர்எம் வீரப்பன்.

எம்ஜிஆரின் விசுவாசியான இவர் பின்னர் சொந்தமாக படக்கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் 'சத்யா மூவீஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து முதல்படமாக எம்ஜிஆரை வைத்தே 'தெய்வத்தாய்' என்ற படத்தை எடுத்தார். 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இயக்குநர் பி.மாதவன் மற்றும் இயக்குநர் கே.பாலசந்தர் இருவரும் பணிபுரிந்த ஒரே எம்.ஜி.ஆர் படம் இது என்பதோடு, இயக்குநர் கே பாலசந்தர் வெள்ளித்திரைக்கு அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலமே.

6 எம்ஜிஆர் படங்கள்


இதனைத்தொடர்ந்து 'நான் ஆணையிட்டால்', 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'ரிக்ஷாக்காரன்', 'இதயக்கனி' என எம்.ஜி.ஆரை வைத்து தனது சத்யா மூவீஸ் மூலம் 6 படங்கள் வரை தயாரித்து மாபெரும் வெற்றி கண்டார். இவற்றில் 1971ம் ஆண்டு வெளிவந்த 'ரிக்ஷாக்காரன்' திரைப்படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான 'தேசிய விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ரஜினிக்கும் 6 படங்கள்


1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டிலில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், அடுத்த கட்ட முன்னணி நாயகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படங்களை தயாரித்தார். 'இராணுவ வீரன்', 'மூன்று முகம்', 'தங்கமகன்', 'ஊர்க்காவலன்', 'பணக்காரன்' மற்றும் 'பாட்ஷா' என ரஜினிகாந்தை நாயகனாக்கியும் 6 படங்கள் வரை எடுத்து பெரும் வெற்றி பெற்றார். குறிப்பாக 'பாட்ஷா' திரைப்படம் அன்றைய கள அரசியல் நிலவரத்தை ரஜினி பொது மேடையில் பேசி, அவர் அரசியல் களம் காண வழிவகுத்ததென்றே சொல்லலாம்.

கமல்ஹாசனை வைத்து ‛‛காக்கி சட்டை, காதல்பரிசு'' என்ற இரண்டு படங்களையும், நடிகர் சத்யராஜை வைத்து 'மந்திரப் புன்னகை', 'புதிய வானம்', 'புதுமனிதன்' ஆகிய திரைப்படங்களையும் தயாரித்திருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் தனது 'சத்யா மூவீஸ்' தயாரிப்பில் நடிக்க வைத்த பெருமை இவருக்குண்டு. சிவாஜி கணேசன் நடித்த ஒரே ஒரு 'சத்யா மூவீஸ்' திரைப்படம் 'புதிய வானம்' என்பது குறிப்பிடதக்கது.

அரசியல் களம்


1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக., சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபை சென்றார். 1991ம் ஆண்டு சட்டசபை இடைத் தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி வாகை சூடினார்.

எம்.ஜி.ஆரின் முதல் அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும், திரைப்படத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறையை கூடுதல் பொறுப்பாகவும் கவனித்து வந்தார். அதன் பின்னர் இந்து அறநிலையத் துறை மற்றும் வனத்துறையையும் அவரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டு அதையும் கவனித்து வந்தார் ஆர்.எம்.வீரப்பன்.

மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வி அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளின் மந்திரி சபையிலும் பதவி வகித்த பெருமை ஆர்.எம்.வீரப்பனுக்கு உண்டு.

கலைத்துறை, அரசியல் என இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பால் உயர்ந்த ஆர்.எம் வீரப்பன், வயது மூப்பின் காரணமாக அனைத்திலிருந்தும் தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு ஓய்வில் இருந்தார். தற்போது காலமாகி உள்ளார்.

'சத்யா மூவீஸ்'-ல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த தமிழ் படங்கள்


1. தெய்வத்தாய் - எம்.ஜி.ஆர்

2. நான் ஆணையிட்டால் - எம்.ஜி.ஆர்

3. காவல்காரன் - எம்.ஜி.ஆர்

4. கண்ணன் என் காதலன் - எம்.ஜி.ஆர்

5. கன்னிப்பெண் - ஜெய்சங்கர்

6. ரிக்ஷாக்காரன் - எம்.ஜி.ஆர்

7. மணிப்பயல் - ஏவிஎம் ராஜன்

8. இதயக்கனி - எம்.ஜி.ஆர்

9. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது - சிவகுமார்

10. ராணுவ வீரன் - ரஜினிகாந்த்

11. மூன்று முகம் - ரஜினிகாந்த்

12. தங்கமகன் - ரஜினிகாந்த்

13. காக்கி சட்டை - கமல்ஹாசன்

14. மந்திரப் புன்னகை - சத்யராஜ்

15. ஊர்க்காவலன் - ரஜினிகாந்த்

16. காதல் பரிசு - கமல்ஹாசன்

17. புதியவானம் - சிவாஜி கணேசன்-சத்யராஜ்

18. என் தங்கை - அர்ஜுன்

19. பணக்காரன் - ரஜினிகாந்த்

20. நிலாப் பெண்ணே - ஆனந்த்

21. புது மனிதன் - சத்யராஜ்

22. எங்க தம்பி - பிரசாந்த்

23. பாட்ஷா - ரஜினிகாந்த்

ஆர்எம் வீரப்பன் மறைந்தாலும் 'சத்யா மூவீஸ்' என்ற பட நிறுவனத்தின் பெயர் கலைத்துறையில் என்றென்றும் அவர் புகழ் பாடும் என்பது மட்டும் திண்ணம்.






      Dinamalar
      Follow us