ஒடிசாவில் சாலை பாதுகாப்பு சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ஒப்பந்தம்
ஒடிசாவில் சாலை பாதுகாப்பு சென்னை ஐ.ஐ.டி.,யுடன் ஒப்பந்தம்
ADDED : டிச 27, 2024 01:52 AM
சென்னை:ஒடிசாவில் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆர்.ஜி.பி., ஆய்வகத்துடன், அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் சாலை விபத்துகளை குறைத்தல், அனைவரிடமும் சாலை பாதுகாப்பு, அதன் பயன் குறித்து உணர்த்தும் வகையில் விரிவான தகவல், கல்வி மற்றும் தொடர்பு திட்டம் செயல்படுத்துதலுக்காக, சென்னை ஐ.ஐ.டி.,யுடன், அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து, ஒடிசா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிபூதி பூஷண் ஜேனா கூறியதாவது:
ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை பயக்கும் பாதுகாப்பு, கண்டுபிடிப்புகளை வழங்கும், 'விக் ஷித் ஒடிசா' இலக்கில், சென்னை ஐ.ஐ.டி.,யுடனான எங்களது ஒப்பந்தம் முக்கிய படியாகும்.
நிகழ்நேர தரவுகளையும், நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, சாலை பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நீண்டகால தீர்வுகளை திறம்பட உருவாக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அம்மாநில போக்குவரத்து துறை செயலர் உஷா பதீ கூறுகையில், ''ஒப்பந்தத்தின் வாயிலாக, எங்களின் அதிகாரிகளிடையே திறனை வளர்ப்பதுடன், துறை ரீதியாக அனைத்து மட்டங்களிலும் சாலை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்ய முயற்சிப்போம்,'' என்றார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறியதாவது:
சாலை பாதுகாப்பு, மக்களின் நல்வாழ்வையும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியையும், நேரடியாக பாதிக்கக்கூடிய, அவசரமான முக்கியமான சவாலாக உள்ளது.
சாலை பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக, சென்னை ஐ.ஐ.டி., தீர்வை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே, தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.