கொள்ளையர்கள் அட்டூழியம் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பீதி
கொள்ளையர்கள் அட்டூழியம் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பீதி
ADDED : ஆக 12, 2025 03:16 AM
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், கொள்ளையர்களின் அட்டூழியம் காரணமாக பீதியில் உறைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே, நத்தமாடிப்பட்டி, விராலிப்பட்டி, கல்லுப்பட்டி, மலிப்பட்டி, தச்சங்குறிச்சி, அரியாணிப்பட்டி, கல்லுப்பட்டி, கோமாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் கொள்ளையர்கள் ஊடுருவி இருப்பதாக, காட்டு தீ போல தகவல் பரவி வருகிறது.
அதற்கு ஏற்ப, சில தினங்களுக்கு முன், நத்தமாடிப்பட்டி கிராமத்தில் சுற்றித் திரிந்த மர்ம நபர்கள் இரண்டு பேரை, ஊர் மக்கள் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்கள் சோழகன்பட்டி வழியாக தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
9 சவரன் பறிப்பு
இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன், கோமாபுரம் பகுதியில் நெஞ்சை உறைய வைப்பது போன்ற கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. கோமா புரத்தை சேர்ந்தவர் ராமையன், 60; கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மூத்த மகன் கலையரசன், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் கான்ஸ்டபிள். இளையமகன் கலைவாணன், தனியார் மதுபான ஆலை ஊழியர்.
சம்பவத்தன்று ராமையன், காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து துாங்கி உள்ளார். வீட்டின் உள்ளே இளையமகனும், மருமகளும், மனைவி லட்சுமியும், மாமியார் பவுனம் பாளும் துாங்கி உள்ளனர்.
கொள்ளையர்கள் வீட்டின் முன் பக்க சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து, பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் புகுந்து, லட்சுமியிடம், 5 சவரன், பவுனம்பாளிடம், 4 சவரன் செயினை பறித்துள்ளனர். இவர்களின் அலறல் கேட்டு ராமையன் எழுந்துள்ளார்.
அப்போது கொள்ளையர்கள் அவரை உருட்டு கட்டையால் தலையில் கடுமையாக தாக்கி விட்டு தப்பி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, உறவினர்கள் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்த சுவடு மறைவதற்குள், கொள்ளையர்கள் அரியாணிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குள் ஊடுருவி உள்ளனர். அங்கு வீரமுத்து என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, 30 ஆயிரம் ரூபாயை திருடி உள்ளனர்.
தமிழ்வாணன், ஆசைத்தம்பி என்பவரின் வீடுகளுக்குள்ளும் புகுந்து திருட முயன்றுள்ளனர். மழை காரணமாக, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த போது, கொள்ளை முயற்சி நடந்து இருப்பதாக, ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சேலை கிழிப்பு
கொள்ளையர்கள், கொடிகளில் காயும் பெண்களின் சேலைகளை, 'பிளேடால்' கிழித்து, ஆங்காங்கே வீசிவிட்டு சென்று விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையர் பீதி காரணமாக, கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், இரவு நேரங்களில் துாங்க முடியாமலும், பெண்கள் விவசாய வேலைகளுக்கு கூட தனியாக செல்ல முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர்.
ஊரை விட்டு வெளியேறி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடையவும் பலர் முடிவு செய்துள்ளனர்.
ராமையாவின் வீட்டில் நடந்த செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்திற்கு பின், கந்தர்வக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.