ADDED : ஜன 15, 2024 02:13 AM
:
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நள்ளிரவில் கொள்ளையர்களை துரத்திச் சென்ற எஸ்.ஐ., ஏட்டு கம்பி, கற்களால் தாக்கப்பட்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவரது வாகனத்தை ஏட்டு சரவண பிரகாஷ் ஓட்டினார். பயிற்சி எஸ்.ஐ., நாராயணன் உடன் சென்றிருந்தார்.
பாலபாக்யாநகரில் மூன்று பேர் கும்பல் ஒரு கடையில் ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை துரத்தினர். அப்போது அந்த கும்பல் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரவணபிரகாஷ் தலையில் தாக்கிவிட்டு டூவீலரில் தப்பினர். சரவணபிரகாஷ் தலையில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. நாராயணன் அவர்களை துரத்தினார். அவர் மீது அந்த கும்பல் சரமாரியாக கற்களை வீசிவிட்டு தப்பினர். இதில் அவருக்கும் நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உதவி கமிஷனர் தகவலின் பேரில் போலீசார் அந்த கும்பலை தேடும் முயற்சி ஈடுபட்டனர்.
இதே கும்பல் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியிலும் இதே போல ஒரு கடையில் ஷட்டரை உடைக்க முயற்சித்தபோது, தடுத்த போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கி தப்பியுள்ளது.