தி.மலையை அச்சுறுத்திய ராட்சத பாறை உடைத்து அகற்றம்; மக்கள் வெளியேற்றம்!
தி.மலையை அச்சுறுத்திய ராட்சத பாறை உடைத்து அகற்றம்; மக்கள் வெளியேற்றம்!
ADDED : ஜன 22, 2025 05:25 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 7 பேரை பலி கொண்ட மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கும், ராட்சத பாறையை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையினால், திருவண்ணாமலை கோயில் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலையார் காப்புக்காடு மலைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் மண்ணில் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மலைப்பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கும் 40 டன் எடை கொண்ட இராட்சத பாறை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
அதன்பேரில், திருச்சியில் இருந்து வந்த பாறைகளை அகற்றும் குழு, பவர் டிரில்லர் இயந்திரத்தின் மூலம், பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராக் கிராக் என்று சொல்லக்கூடிய அமிலத்தை பயன்படுத்தி தூளாக்கும் முயற்சியில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி 5 நாட்கள் வரை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் பணியின் போது பாறைகள் உருண்டோடி பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க, இரும்புத் தகடுகள் போட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாறைகள் உருண்டோடினால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக அங்குள்ள வீடுகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.