சென்னையை சேர்ந்தவர் உருவாக்கிய ராக்கெட் நிறுவனத்தின் அபார வளர்ச்சி : மதிப்பு ரூ.800 கோடி ஆனது
சென்னையை சேர்ந்தவர் உருவாக்கிய ராக்கெட் நிறுவனத்தின் அபார வளர்ச்சி : மதிப்பு ரூ.800 கோடி ஆனது
ADDED : ஜூலை 08, 2024 05:11 PM

சென்னை: சென்னையை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் 2021 ல் உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.800 கோடி ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை சேர்ந்த டிராக்டர் டிரைவரின் மகன் ஆனந்த் மேகலிங்கம். இவரது தாயார் குடும்ப தலைவி. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் படிப்பை துவக்கினார். ஆனந்த்க்கு இருந்த விளையாட்டு மீதான ஆர்வம் காரணமாக அவருக்கு நிதியுதவி கிடைத்தது. இதன் மூலம் அவர் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்தார்.
இதன் பிறகு 2021ல் பட்ட மேற்படிப்பின் போது ‛ ஸ்பேஸ் ஜோன் இண்டியா' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கினார். அதில், அவரது தந்தையை பங்குதாரர் ஆக்கினார்.
இந்த நிறுவனம் ஆனது, நவீன விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மாணவர்கள் மத்தியில் கல்வியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். புதுமையான உந்துவிசை அமைப்புகள், திட மற்றும் திரவ உந்துவிசை ஆகியன மூலம் ராக்கெட் ஏவுவதற்கான செலவை குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற இந்த நிறுவனம் தீவிரமாக பணியாற்றியது.
2023 ல் இந்தியாவின் முதலாவது ஹைப்ரிட் ராக்கெட்டை சென்னையில் இருந்து ஸ்பேஸ் ஜோன் இந்தியா வெற்றிகரமாக ஏவியது. விண்வெளி தொழில்நுட்பத்தை அனைவருக்கும் ஏற்றதாகவும், உகந்ததாகவும் மாற்றுவதே தங்களது நிறுவனத்தின் நோக்கம் என்கிறார் ஆனந்த் மேகலிங்கம். இதற்காக ராக்கெட் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது, கல்வி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நோக்கமாக வைத்து செயல்படுகிறார்.
ஸ்பேஸ் ஜோன் நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீட்டில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு பிரதமர் மோடி மற்றும் முக்கிய நிறுவனங்களின் அங்கீகாரம் கிடைத்தது. தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.800 கோடி ஆக உயர்ந்துள்ளது. மேலும் வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை எதிர்பார்க்கிறது.