முருகபக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்கள் வரும் வழிகள்: போலீஸ் 'பாஸ்' பெறுவது கட்டாயம்
முருகபக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்கள் வரும் வழிகள்: போலீஸ் 'பாஸ்' பெறுவது கட்டாயம்
ADDED : ஜூன் 18, 2025 06:45 AM
மதுரை: மதுரை ரிங் ரோடு வண்டியூர் சுங்கச்சாவடி அருகே ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்து வரும் வாகனத்திற்கும் தனித்தனி வண்ணங்களில் அந்தந்த மாவட்ட எஸ்.பி., -கமிஷனர் அலுவலகம் மூலம் பாஸ் வழங்கப்பட உள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினைப் பெற்று மாநாட்டில் கலந்து கொள்ளலாம். மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பவர்கள், அந்தந்த டி.எஸ்.பி., அலுவலகங்களில் விண்ணப்பித்து, வாகன அனுமதி சீட்டை நீதிமன்ற உத்தரவுபடி 24 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம்.
பச்சை, வெள்ளை நிற பாஸ்
தென் மண்டல மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி சீட்டு வழங்கப்படும். வடக்கு மண்டல மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலுார், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார் மற்றும் ஆவடி, தாம்பரம் மற்றும் சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதி சீட்டு வழங்கப்படும்.
நீலம், மஞ்சள், சிவப்பு நிற பாஸ்
மத்திய மண்டல மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதி சீட்டு வழங்கப்படும். மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதி சீட்டும், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதி சீட்டும் வழங்கப்படும். இந்த அனுமதி சீட்டை கொண்டுள்ள வாகனங்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
மாநாட்டிற்கு வரும் வழிகள்
வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி, மேலுார், ஒத்தக்கடை, சிவகங்கை ரோடு சந்திப்பு வழியாகவும், நத்தம் நான்கு வழிச்சாலையிலிருந்து கடச்சனேந்தல், ஒத்தக்கடை, உத்தங்குடி, பாண்டி கோயில் வழியாகவும் வரவேண்டும்.
திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர் வாகனங்கள் சமயநல்லுார் பைபாஸ் ரோடு, புதுக்கோட்டை சந்திப்பு, கூத்தியார் குண்டு, கப்பலுார் சந்திப்பு, நாகமலை பரம்புபட்டி, வலையங்குளம் சுங்கச்சாவடி, மண்டேலா நகர் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி, வேலம்மாள் மருத்துவமனை, விரகனுார் சந்திப்பு வழியாக வரவேண்டும்.
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டம், திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்கள் திருமங்கலம், கப்பலுார் சந்திப்பு, பரம்புபட்டி, வலையங்குளம் சுங்கச்சாவடி, மண்டேலா நகர் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி, வேலம்மாள் மருத்துவமனை, விரகனுார் ரவுண்டானா வழியாக வரவேண்டும்.
துாத்துக்குடி, திருச்செந்துாரில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர், எலியார்பத்தி சுங்கச்சாவடி, மண்டேலா நகர் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி, வேலம்மாள் மருத்துவமனை, விரகனுார் ரவுண்டானா வழியாக வரவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருமாஞ்சோலை, பூவந்தி, வரிச்சியூர், கருப்பாயூரணி, சிவகங்கை ரோடு சந்திப்பு வழியாக வரவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பார்த்திபனுார், மானாமதுரை, திருப்புவனம், சிலைமான், விரகனுார் ரவுண்டானா சந்திப்பு வழியாக வரவேண்டும்.
மாநாடு முடிந்த பிறகு அதே வழியிலேயே தங்களது மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் திரும்பிச்செல்ல வேண்டும். இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.

