நீதிபதி மீது மீண்டும் செருப்பு வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத்
நீதிபதி மீது மீண்டும் செருப்பு வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத்
ADDED : நவ 14, 2025 01:02 AM
சென்னை: நீதிபதி மீது ரவுடி கருக்கா வினோத் மீண்டும் செருப்பு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன், 2023ல் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கருக்கா வினோத்திற்கு, 42, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நேற்று முன்தினம், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடையை, 2015ல் கருக்கா வினோத் உட்பட நான்கு பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளனர். இந்த வழக்கில், கருக்கா வினோத் உட்பட நான்கு பேரை ஆஜர்படுத்துவதற்காக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு, நேற்று அவரை போலீசார் அழைத்து வந்தனர்.
நீதி பதி வி.பாண்டியராஜ் முன் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், 'கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு உள்ளது' எனக்கூறி திடீரென கூச்சலிட்டார். மேலும் மரியாதை குறைவாக பேசிய கருக்கா வினோத், தன் செருப்பை கழற்றி, நீதிபதியை நோக்கி வீச முயன்ற போது, அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை டிச., 8ம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார். அத்துடன், கண்ணிய குறைவான செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தும்படி, காவல் துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
ஏற்கனவே, கடந்த ஜனவரியில் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்திய போது, நீதிபதி மீது காலணி வீசி தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

