ரவுடி சீசிங் ராஜா மனைவியர் வீட்டில் 'ரெய்டு' போலி ஆவணம் தயாரித்து அரசு நிலம் அபகரித்த விவகாரம்
ரவுடி சீசிங் ராஜா மனைவியர் வீட்டில் 'ரெய்டு' போலி ஆவணம் தயாரித்து அரசு நிலம் அபகரித்த விவகாரம்
ADDED : நவ 20, 2024 12:42 AM

சென்னை:போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் உள்ளிட்ட, 14 இடங்களில், போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சீசிங் ராஜா, 51; ரவுடி. இவர் மீது, ஆறு கொலைகள், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி என, 39க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. எதிரிகளை தீர்த்துக்கட்ட எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பார். இவர் மீது ஆயுத தடை சட்டத்திலும் வழக்குப் பதிவாகி இருந்தது.
கடந்த ஜூலையில், சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இதில், சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருக்கலாம் என, தனிப்படையினர் தேடி வந்தனர்.
ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து, நீலாங்கரையில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கி விட்டு சீசிங் ராஜா தப்ப முயன்ற போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழக்குப்பதிவு
இந்நிலையில், 2015ல், சேலையூர் காவல் நிலைய எல்லையில் உள்ள அகரம்தென் என்ற பகுதியில், ஒரு ஏக்கர், 18 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து, வேறு நபர்களுக்கு விற்க, சிலர் முயற்சித்துள்ளனர். இதுகுறித்து, சேலையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த நிலத்தை அபகரிக்க, சீசிங் ராஜாவும், அவரின் கூட்டாளிகளும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும், சீசிங் ராஜா உயிரோடு இருந்த போது, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், தனியார் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி, நில அபகரிப்பில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.
அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக்கிடம், தற்போது புகார் அளித்துள்ளனர். அவரது உத்தரவுபடி, பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்தி கேயன் தலைமையில், ஆறு உதவி கமிஷனர்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட போலீசார், சீசிங் ராஜா மனைவியர், அவரின் கூட்டாளிகள், உறவினர்கள் வீடுகளில், வருவாய் துறையினர் உதவியுடன் நேற்று காலை, 6:00 மணி முதல் சோதனை நடத்தினர்.
14 இடங்கள்
சென்னை கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் உள்ள, சீசிங் ராஜா வீட்டில், அவரின் முதல் மனைவி ஜானகி, 42 வசிக்கிறார்.
அந்த வீட்டிலும், சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும், சீசிங் ராஜாவின் இரண்டாவது மனைவி ஜான்சி, மூன்றாவது மனைவி வினித்ரா மற்றும் கோவிலம்பாக்கத்தில் சீசிங் ராஜாவுடன் தொடர்பில் இருந்த மற்றொரு பெண் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
சீசிங் ராஜாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் வசிக்கும் சேலையூர், மப்பேடு, கஸ்பாபுரம், மாடம்பாக்கம், வில்லிவாக்கம் என, 14 இடங்களில் சோதனை நடந்தது.
சொத்து ஆவணங்கள், நில வரைபடங்கள், போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, சீசிங் ராஜா மனைவியர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.