ரூ.1 லட்சம் கோடி கடன் இலக்கு ஒன்றரை மாதங்களில் சாத்தியமா? கூட்டுறவு வங்கிகள் சுறுசுறுப்பு
ரூ.1 லட்சம் கோடி கடன் இலக்கு ஒன்றரை மாதங்களில் சாத்தியமா? கூட்டுறவு வங்கிகள் சுறுசுறுப்பு
ADDED : பிப் 08, 2025 10:42 PM

சென்னை:கூட்டுறவு வங்கிகளில், நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும், 1 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், இதுவரை, 85,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது.
இன்னும் ஒன்றரை மாதங்களில், 15,000 கோடி ரூபாய் கடன் வழங்குவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல பிரிவுகள்
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டு றவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் உட்பட, பல பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில், 1.03 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில், அதிக அளவாக நகைக்கடன் பிரிவில், 57,500 கோடி ரூபாய்; பயிர்க்கடன், 16,500 கோடி; சுய உதவி குழு பிரிவில், 5,505 கோடி; கால்நடை வளர்ப்பு கடன், 2,500 கோடி ரூபாய் கடன்கள் அடங்கும்.
நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை, 16,000 கோடி ரூபாய் பயிர்க்கடன், 40,000 கோடி ரூபாய் நகைக்கடன், 4,000 கோடி ரூபாய் சுய உதவி குழு கடன் உட்பட, அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 85,000 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், திட்டமிட்டபடி, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கால்நடை வளர்ப்பு
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2023 - 24ல் அனைத்து பிரிவுகளிலும், 82,000 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டன. இந்தாண்டு முதல் முறையாக, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க முடிவு செய்து, எந்தெந்த பிரிவில் எவ்வளவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கு ஏற்ப வழங்குமாறு, வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
மகளிர் குழு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட சிறப்பு வகை கடன் பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து வழங்கி, திட்டமிட்ட இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.