ADDED : ஏப் 04, 2025 02:04 AM
சென்னை:திடக்கழிவு மேலாண்மைக்கான துாய்மை இயக்கத்தின் நிர்வாக செலவுகளுக்காக, 10 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில், தினமும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில், ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில், துாய்மை இயக்கம் துவக்கப்படும்' என, சட்டசபையில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான அரசாணையை, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்த, துாய்மை இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தனி நிறுவனம் துவக்கப்படும். துாய்மை தமிழகம் இயக்கத்தை செயல்படுத்த, முதல்வர் தலைமையில் 20 பேர் அடங்கிய நிர்வாக குழு அமைக்கப்படும்.
கொள்கை வகுப்பது, நிதி திரட்டுவது, பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல், இயக்க செயல்பாடுகளை கண்காணித்தல், இக்குழுவின் பணியாகும்.
இதற்கு அடுத்த நிலையில், தலைமை செயலர் தலைமையில், 11 பேர் அடங்கிய மாநில அளவிலான செயற்குழு அமைக்கப்படும். அதேபோல், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைத்து, இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியவர்களை, இதில் பயன்படுத்தலாம்.
இந்த இயக்கத்தின் முழுமையான பணிகளுக்கு, 46 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை நிர்வாக அமைப்பை ஏற்படுத்தவும், மனித வள ஒருங்கிணைப்புக்காகவும், 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

