கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம் வெள்ளத்தில் இறந்தோருக்கு ரூ. 2 லட்சமா? த.வ.கா., வேல்முருகன் எம்.எல்.ஏ., கேள்வி
கள்ளச்சாராய சாவுக்கு ரூ. 10 லட்சம் வெள்ளத்தில் இறந்தோருக்கு ரூ. 2 லட்சமா? த.வ.கா., வேல்முருகன் எம்.எல்.ஏ., கேள்வி
ADDED : டிச 17, 2024 07:45 PM

கடலுார்:கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்போது, மழை, வெள்ளத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கூடாதா என, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலுாரில் அவர் அளித்த பேட்டி:
இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம், கடலுார் மாவட்டம் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில், தென்பெண்ணை, கெடிலம் ஆற்றால் சூழப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் 10 லட்ச ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளது. வெறும் 2 ஆயிரம் நிவாரணம் அறிவித்தால் போதாது. அதுவும் முறையாக வழங்கப்படவில்லை.
மழையின் போது தங்க வைக்கப்பட்டவர்களுக்கு சரியாக உணவு வழங்கவில்லை. அதிகாரிகள் முறையாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை.
நீர்வளத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், தமிழகத்தில் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணமாக பத்து லட்ச ரூபாய் வழங்கி உள்ளனர். ஆனால், இயற்கை பேரிடரில் இறந்தால் ஒரு லட்சம், 2 லட்சம் கொடுப்பதாக அறிவிக்கின்றனர். அரசை, அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபையை கூட்டுவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, மழைக்கால கூட்டத்தொடரை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வெறும் 2 நாட்கள் நடத்தி முடித்து விட்டார்கள்.
தேர்தலின்போது தி.மு.க., வில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கொடுக்கும் மரியாதை, தேர்தல் முடிந்த பின் இல்லாமல் போய்விடுகிறது. நடக்கும் பல தவறுகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லாமல் அதிகாரிகள் மறைக்கின்றனர். அவர்கள் சொல்வதைத்தான் ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட துணை முதல்வர், நான் சார்ந்திருக்கும் மாவட்டத்துக்கு வந்தார். ஆனால், அந்தப் பகுதி எம்.எல்.ஏ.,வான எனக்கு எந்தத் தகவலும் சொல்லவில்லை.
தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை முதல்வர் கண்டிக்க வேண்டும்.
தேர்தல் நெருக்கத்தில் எனக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கோரினேன். செய்வதாகச் சொன்னவர்கள், தற்போது ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்கின்றனர். பீஹார், ஒரிஸ்ஸா, தெலுங்கான உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அந்தந்த மாநிலங்களே நடத்தி முடித்திருக்கின்றன.
அதுபோல என்.எல்.சி.,யில் வெறும் 10 லட்சமாக இருந்த சி.எஸ்.ஆர்., நிதியை போராட்டங்கள் நடத்தி 100 கோடி ரூபாயாக்கினோம். ஆனால், இன்று அதை ஆளும்கட்சி பிரமுகர்கள் பிரித்து கொள்கிறார்கள்.
இதே நிலையிலேயே தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். அதனால், விரைவில் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து, அடுத்தகட்ட முடிவெடுக்கப் போகிறேன். முடிவு அதிரடியாகவும் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.