'கிரிப்டோ கரன்சி'யாக மாற்றி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
'கிரிப்டோ கரன்சி'யாக மாற்றி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
ADDED : அக் 29, 2024 03:29 AM

சென்னை : துபாயில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்திற்கு தேவையான பணத்தை, குறைந்த விலையில் கிரிப்டோ கரன்சியாக மாற்றித் தருவதாக, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆறு பேரை, சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், சென்னை தெற்கு மண்டல சைபர் குற்றத் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'துபாயில் உள்ள எங்கள் நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு தேவையான பணத்தை, 'கிரிப்டோ கரன்சி'யாக அனுப்புவது வழக்கம்.
சில மர்ம நபர்கள் எங்களை தொடர்பு கொண்டு குறைந்த விலையில், கிரிப்டோ கரன்சியாக மாற்றித் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்து விட்டனர்' என, கூறியிருந்தார்.
இதுகுறித்து, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோசடி நபர்கள், தேனியில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு வாயிலாக பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, தேனியில் முகாமிட்டு விசாரித்தனர். அப்போது, விபரம் தெரியாத நபர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி, அவர்களுக்கு பண ஆசை காட்டி, தனியார் நிறுவனத்திடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியை சேர்ந்த அபிராஜா, 29; பல்லவராயன்பட்டி லோகநாதன், 23; மதுரையை சேர்ந்த அஸ்வந்த், 23; தேனியைச் சேர்ந்த குமரேசன், 28; பள்ளப்பட்டி மகேஷ்குமார், 25; திண்டுக்கல் முகமது இஸ்மாயில் பர்வேஷ், 21 ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 10.92 லட்சம் ரூபாய், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.