ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது
ADDED : செப் 02, 2024 04:06 PM

கரூர்: ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்த போது, ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செல்வராஜ் உள்ளிட்டோரை கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சேகரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.