5 மாதங்களில் சைபர் மோசடிகளால் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு
5 மாதங்களில் சைபர் மோசடிகளால் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு
ADDED : ஜூன் 01, 2025 10:43 AM

சென்னை: சென்னையில் கடந்த 5 மாதங்களில் பல்வேறு சைபர் குற்ற சம்பவங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடியை சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நிதி சார்ந்த சைபர் குற்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை உடனடியாக மீட்டு கொடுக்க சென்னை பெருநகர போலீஸ் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கடந்த 5 மாதங்களில் பல்வேறு சைபர் குற்ற சம்பவங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடியை சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்துள்ளனர்.
கடந்த மே 1ம் தேதி முதல் மே 29ம் தேதி வரையில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனின் மத்திய குற்றப்பிரிவில் 26 பணமோசடி புகார்கள் வந்துள்ளன. அதேபோல, ரூ.1.57 கோடி பணம் மோசடியாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலத்தில் ரூ.14.89 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர். மேற்கு மண்டலத்தில் சைபர் குற்றங்களின் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.2.31 கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜனவரி 1ம் தேதி முதல் மே 29ம் தேதி வரையில் 582 புகார்களின் அடிப்படையில் ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சைபர் கிரைம் போலீஸாரால், 1,284 புகார்களின் அடிப்படையில் ரூ.10.25 கோடி மோசடியாளர்களிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
போலி விளம்பரங்களை நம்பி ஆப்கள் மற்றும் இணையதளங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும், தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.