ரூ.120 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு
ரூ.120 கோடி கோவில் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு
ADDED : நவ 30, 2024 02:32 AM
ப.வேலுார்:ப.வேலுார் அருகே, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் ஆக்கிரமித்திருந்த, 120 கோடி ரூபாய் மதிப்பு கோவில் நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்க வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, பொத்தனுார் டவுன் பஞ்., 4வது வார்டு, காவேரி நகர் பகுதியில், 12.42 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம், பொத்தனுார் தேவராய சமுத்திரத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக, பரமத்தி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
கடந்த, 21ல், ஆக்கிரமித்துள்ள நிலம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானது என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற, நேற்று அந்த இடத்திற்கு வந்தனர்.
அப்போது, நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், 60, மற்றும் இவரது உறவினர்கள் அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள், 'இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது' என, அறிவிப்பு பலகை வைத்து சென்றனர்.
இதுகுறித்து, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் கூறும் போது,''பாறைகளாக இருந்த நிலத்தை சீர் செய்து, விவசாய நிலமாக மாற்றியுள்ளோம்.
''நீதிமன்ற தீர்ப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அதிகாரிகள், விவசாய நிலத்தில் உள்ள பொருட்களை அகற்றும்போது தான், இதுகுறித்து எங்களுக்கு தெரிய வந்தது. மேல்முறையீடு செய்ய உள்ளோம்,'' என்றார்.