மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு
ADDED : ஜூன் 26, 2025 04:42 AM

மதுரை : மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கான வரிவிதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு நடந்த விவகாரத்தில் மண்டலம் 3ன் தலைவர் பாண்டிச்செல்வியின் நேர்முக உதவியாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்களுக்கு வரி விதிப்பு, வரி வசூல் பணிகள் ஆன்லைனில் நடக்கின்றன.
புதிய கட்டடங்களுக்கு அவை அமைந்துள்ள மாநகராட்சி பகுதிக்கு ஏற்ப வரி விதிப்பு செய்யப்படும். ஒரு கட்டடத்திற்கு ஒரு முறை வரி விதித்தால் நீதிமன்ற உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்டம் தீர்மானத்தின் அடிப்படையில் தான் வரிவிதிப்பு குறைப்பு மேற்கொள்ள முடியும் என்பது விதி.
ஆனால் வரிவிதிப்பு, வசூல் தொடர்பாக 2024ல் தினேஷ்குமார் கமிஷனராக இருந்தபோது நடத்திய வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிமீறி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து உதவி கமிஷனர்கள் குழுக்கள் நடத்திய விசாரணையில் ரூ.1.50 கோடிக்கும் மேல் வரி வசூலில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டில் 13 பில் கலெக்டர்களுக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 11 பேருக்கு அப்போதைய கமிஷனர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார். இதனால் உதவிக் கமிஷனர்கள் குழு இதுகுறித்து விசாரித்தது.
இதில் 1.50 கோடி வரை வரியை குறைத்து நிர்ணயித்து வசூலிக்கப்பட்டதும், அவ்வகையில் மாநகராட்சிக்கு 1.50 கோடி இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த முறைகேட்டில் 13 பில் கலெக்டர்கள் சம்பந்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 11 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதிகம் முறைகேட்டில் ஈடுபட்ட 5 பேரை சஸ்பெண்ட் செய்தார்.
சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
இந்த முறைகேடு குறித்து அப்போதைய கமிஷனர் தினேஷ்குமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், முறைகேடு நடந்ததற்கான கணினி பரிமாற்ற ஆதாரங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் சைபர் போலீசார் விசாரணையில் திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில், முறைகேட்டுக்கான ஆதாரம் சிக்கிய நிலையில் விசாரணையை தொடர்ந்து நடத்த தற்போதைய கமிஷனர் சித்ராவும் அனுமதியளித்தார்.
இதையடுத்துமதுரை மண்டலம் 3 (மத்தி) தலைவரின்நேர்முக உதவியாளர் தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ், மற்றொருகம்ப்யூட்டர் ஆபரேட்டர் கார்த்திக்கிடம் விசாரணை நடக்கிறது.