கார் மோதி ஐ.டி., நிறுவன ஊழியர் பலி குடும்பத்திற்கு ரூ.1.63 கோடி இழப்பீடு
கார் மோதி ஐ.டி., நிறுவன ஊழியர் பலி குடும்பத்திற்கு ரூ.1.63 கோடி இழப்பீடு
ADDED : டிச 02, 2024 02:31 AM
சென்னை: சென்னை தி.நகர் அருகே கார் மோதி இறந்த, தனியார் ஐ.டி., நிறுவன ஊழியரின் குடும்பத்திற்கு, 1.63 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் தேசிகா சாலையை சேர்ந்தவர் சிவராமன், 50. தனியார் ஐ.டி., நிறுவன ஊழியர்; 2016 நவம்பர், 19ல், தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, அவ்வழியே வந்த கார், அவரை முந்தி செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சிவராமனின் இரு சக்கர வாகனத்தில் மோதியதில், அவர் கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேலாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2017 பிப்., 10ல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது இறப்புக்கு, 4.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், சிவராமன் மனைவி ரூபா, மகள் மாளவிகா, மகன் சந்தோஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கார் உரிமையாளர் தரப்பில், 'மனுதாரரின் கணவருடைய கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த போது, கார் டிரைவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருந்தது' என்று தெரிவிக்கப்பட்டது.
காப்பீடு நிறுவனம் தரப்பில், 'விபத்து நடந்த போது, கார் டிரைவரின் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி விட்டது' என, வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
'காரின் இடது பக்க கதவில், இரு சக்கர வாகன ஓட்டுனர் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளார்' என, கார் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காரை ஆய்வு செய்ததில், காரின் முன்பக்க கதவில், 'பெயின்ட்' உரிந்துள்ளது.
அதாவது, உயிரிழந்த சிவராமனின் இரு சக்கர வாகன கைப்பிடி, காரின் முன் பக்கம் உரசியது தெரிய வருகிறது. சான்று ஆவணங்களை பார்க்கும் போது, அதிவேகம், அஜாக்கிரதையாக காரை, அதன் டிரைவர் இயக்கியதே விபத்துக்கு காரணம்.
எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 1 கோடியே, 63 லட்சத்து, 95,000 ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.