பைக் மோதி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.16.96 லட்சம்
பைக் மோதி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.16.96 லட்சம்
ADDED : ஆக 11, 2025 05:25 AM
சென்னை : விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு, 16.96 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆலப்பாக்கம் மாந்தவை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை; சலவை தொழிலாளி.
இவர், 2023 பிப்ரவரி 11ல் விழுப்புரம் மாவட்டம் கீழ்பேட்டை கிழக்கு கடற்கரை பகுதியில் சாலையோரம் நின்றிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம், இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.
அவரது மனைவி சாந்தி, கணவரின் இறப்புக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரிகிறது.
எனவே, மனுதாரர் குடும்பத்துக்கு, மேக்மா எச்.டி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக, 16 லட்சத்து 96,970 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.