'திருடுப்போனது ரூ.18.5 லட்சம்; சொன்னது ரூ.1.5 கோடி': பொய் புகாரளித்த மாஜி பா.ஜ., நிர்வாகி மீது நடவடிக்கை?
'திருடுப்போனது ரூ.18.5 லட்சம்; சொன்னது ரூ.1.5 கோடி': பொய் புகாரளித்த மாஜி பா.ஜ., நிர்வாகி மீது நடவடிக்கை?
UPDATED : மே 20, 2024 01:24 PM
ADDED : மே 20, 2024 01:22 PM

அன்னூர்: முன்னாள் பா.ஜ., நிர்வாகி விஜயகுமாரின் வீட்டில் மே 18ல் ரூ.1.5 கோடி திருட்டு போனதாக புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக திருடிய நபரை பிடித்த போலீசார், விசாரணையில் ரூ.18.5 லட்சம் தான் திருடியதாக தெரியவந்தது. மாஜி பா.ஜ., நிர்வாகியும் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டார். பொய் புகாரளித்த விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
அன்னூர் அருகே சொக்கம்பாளையம் திருமுருகன்நகரில், தோட்டத்தில் வசிப்பவர் விஜயகுமார், 45. பா.ஜ., முன்னாள் நிர்வாகியான இவரது வீட்டில் நேற்று முன்தினம் (மே 18) மர்ம நபர்கள், கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 கோடி ரூபாய், ஒன்பது பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றதாக விஜயகுமார் அன்னூர் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளையர்களை கண்டுப்பிடிக்க மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி தலைமையில், 10 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வீட்டில் நகை, பணத்தை திருடியவரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது, வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது ரூ.18.5 லட்சம் மட்டுமே ரூ.1.5 கோடி இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பொய்யான தகவல் கொடுத்ததாக புகார்தாரர் விஜயக்குமார் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

ஒப்புதல்
கோவை ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறியதாவது: சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ததில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன், 33, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் சோமனூரில் தங்கி இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அன்பரசனிடம் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் இருந்து ரூ.18.5 லட்சம் பணம் தான் எடுத்தேன் என கூறினார். இதுகுறித்து புகார்தாரரிடம் கேட்டபோது, விஜயக்குமாரும் ரூ.18.5 லட்சம் என்பதை ஒப்புக்கொண்டார்.
அதிக தொகை எனக் கூறினால் தான் போலீசார் துரித நடவடிக்கை எடுப்பார்கள் என எண்ணி பொய் சொன்னதாகவும் கூறினார். இதனால், பொய்யான தகவல் கூறியதால் அவர் மீது ஐ.பி.சி.,182, 203 பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். கைது செய்யப்பட்டுள்ள அன்பரசன் பல்வேறு மாவட்டங்களில் 18க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

