பாம்பு பிடிப்போர் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு
பாம்பு பிடிப்போர் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு
ADDED : ஜூலை 22, 2025 11:53 PM
சென்னை:இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், விபத்து மற்றும் பாம்புக் கடியால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையின், தொழில் வணிக ஆணையரகத்தின் கீழ், இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கங்கள், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளன.
இச்சங்கங்கள், நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்புகளிடம் இருந்து விஷத்தை எடுத்து, அதை பாம்புக்கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கின்றன.
இச்சங்க உறுப்பினர்கள் பாம்புக்கடியால் இறந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று, 60 வயதுக்கு உட்பட்ட உறுப்பினர்கள் விபத்து மற்றும் பாம்புக்கடியால் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்காக, 1.50 கோடி ரூபாயில், தனி மூலதன நிதியம் உருவாக்கப்பட உள்ளது.