தகவல்களை மறைத்து பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்
தகவல்களை மறைத்து பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்
ADDED : டிச 06, 2024 12:42 AM

சென்னை : தகவல்களை மறைத்து பொது நல வழக்கு தொடுத்தவருக்கு, 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி, ஓராண்டுக்கு வழக்கு தொடரவும் தடை விதித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: திருமுல்லைவாயிலில், 40.95 ஏக்கர் வனப்பகுதி நிலம், முதலில் அரசு நிலம், பின் தனியார் நிலம் என, வகை மாற்றம் செய்யப்பட்டது. தன் செல்வாக்கை பயன்படுத்தி, 40.95 ஏக்கர் நிலத்தையும் விற்பதற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன் அனுமதி பெற்று தந்தார். இதில், 19.99 ஏக்கர் நிலத்தை ஞானசேகரனுக்கு, நிலம் ஒதுக்கீடு பெற்றவர் விற்பனை செய்தார்.
அதைத்தொடர்ந்து, ஞானசேகர் உள்ளிட்ட சிலர், 12.50 ஏக்கர் நிலத்தை, தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட இரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தனர். 40.95 ஏக்கர் நில விற்பனைக்கு அனுமதி அளித்து, 2007ல் வருவாய்த் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீதி உள்ள நிலத்தை அளவீடு செய்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக, வருவாய் ஆவணங்களில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், சிறப்பு பிளீடர் ஆர்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கட்டுமான நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகினர்.
மனுவை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
நில விற்பனைக்கு அனுமதி வழங்கி, 2007 செப்டம்பரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பின், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாமதமாக வழக்கு தொடர்ந்ததற்கு, எந்த விளக்கமும் இல்லை. மனுவில் தனக்கு, 67 வயது என்று குறிப்பிட்டுள்ளார். விசாரணையின் போது, 63 என்றார். அவரது ஆதார் அட்டையை பார்க்கும் போது, 62 வயதாக உள்ளது.
ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய் என்று மனுவில் குறிப்பிட்டு விட்டு, விசாரணையின் போது, 3 லட்சம் ரூபாய் என்றார். நிலம் குறித்த பல விபரங்கள் மனுவில் இருந்தாலும், வனப்பகுதியாக இல்லை என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. வேண்டுமென்றே, இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் இருந்து இரண்டு விஷயங்களை எடுத்துக்கொள்ள முடியும். ஒன்று, நீதிமன்றத்தில் மனுதாரர் பொய் சொல்லி உள்ளார். அல்லது யாரோ ஒருவர், வழக்கு தொடுப்பதற்காக மனுதாரரை முன்நிறுத்தி உள்ளார்.
உள்நோக்கத்துடன் இதுபோன்ற பொதுநல மனுக்கள் தாக்கல் செய்வதை தடுக்க, வழக்கு செலவுத் தொகை விதிக்கப்பட வேண்டும்.
எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. முன் அனுமதியின்றி, ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தொடர மனுதாரருக்கு தடை விதிக்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாயை, கட்டுமான நிறுவனத்துக்கும், 10 லட்சம் ரூபாயை, மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கும், நான்கு வாரங்களில் மனுதாரர் செலுத்த வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.