எலக்ட்ரிக் சார்ஜிங் மையத்தில் ரூ.20 லட்சம் மென்பொருள் திருட்டு: ஊழியர் மீது "பகீர்" புகார்
எலக்ட்ரிக் சார்ஜிங் மையத்தில் ரூ.20 லட்சம் மென்பொருள் திருட்டு: ஊழியர் மீது "பகீர்" புகார்
ADDED : மே 16, 2024 05:24 PM

மதுரை: எலக்ட்ரிக் சார்ஜிங் மையத்தில் ரூ.20 லட்சம் மென்பொருளை ஊழியர் சிவா திருடிவிட்டதாக நிறுவனத்தின் இயக்குனர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள், ரூ.125 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
மதுரையில் பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மோகன்ராஜ் என்ற தம்பதியினர் 6 ஆண்டுகளாக டக்கர் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இ-கார் மற்றும் இ-பைக் சார்ஜிங் மையம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தி வந்த, மற்றொரு நிறுவனம் மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ளது. இந்த நிறுவனத்தில், மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த சிவா என்ற மென்பொருள் பொறியாளர் பணியாற்றி வந்துள்ளார்.
புகார்
இந்நிலையில் சிவா கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்பிலான சாப்ட்வேர்கள் மற்றும் பாஸ்வேர்டை சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து திருடி சென்று விட்டார் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மோகன்ராஜ் மற்றும் இயக்குனர் பிராகல்யா எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
ரூ.20 லட்சம் மென்பொருள் திருட்டு
இதையடுத்து, விரைவாக விசாரணை நடத்த கோரி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிர்வாக இயக்குனரான மோகன்ராஜ் மற்கும் இயக்குனர் பிராகல்யா ஆகியோர் புகார் மனு அளித்தனர். இது குறித்து நிறுவன இயக்குனர் பிராகல்யா கூறியதாவது: 20 லட்சம் மதிப்பிலான தங்களது நிறுவன சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை ஊழியர் சிவா திருடி விட்டார்.
வர்த்தகம் பாதிப்பு
இதனால் எங்களை நம்பி தங்களது நிறுவனத்தில் பணிபுரியக்கூடியவர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து சிவாவிடம் போலீசார் அழைத்து பேசும்போது தங்களிடம் சாப்ட்வேர் மற்றும் பாஸ்வேர்டை தர முடியாது என கூறியுள்ளார். மகன் போல் வளர்த்த இளைஞர் திருடி விட்டார். ரூ.125 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சார்ஜிங் மைய மென்பொருளை ஊழியர் திருடியது உண்மையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.