மசூர் பருப்பை வாங்கியிருந்தால் ரூ.200 கோடி மிச்சமாகி இருக்கும்: அரசு முடிவெடுக்க ஐகோர்ட் கெடு
மசூர் பருப்பை வாங்கியிருந்தால் ரூ.200 கோடி மிச்சமாகி இருக்கும்: அரசு முடிவெடுக்க ஐகோர்ட் கெடு
ADDED : பிப் 17, 2024 06:45 AM

சென்னை: மசூர் பருப்பை கொள்முதல் செய்திருந்தால், 200 கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கும் என்பதால், பொது வினியோக முறையில், மசூர் பருப்பை வினியோகிக்க கோரிய மனு மீது, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
பொது வினியோகத்தில் மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டு, பின், அது வாபஸ் பெறப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கேசரி பருப்பு கலக்காமல், மசூர் பருப்பு வழங்குவதை உறுதி செய்யும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மசூர் பருப்பு கொள்முதலுக்கு, நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதர பருப்பு வகைகளை ஒப்பிடும் போது, மசூர் பருப்பின் விலை குறைவானது. பொது வினியோக திட்டத்தில், மசூர் பருப்பை வழங்கும்படி, தமிழக அரசுக்கு, மத்திய நுகர்வோர் துறைச் செயலர் கடந்த ஆண்டு நவம்பரில் கடிதம் அனுப்பி உள்ளார்.
மத்திய அரசின் கடிதத்தை பரிசீலிக்க, அரசு தவறி விட்டது. கடந்த ஜனவரியில், 9,000 டன் கனடா மஞ்சள் பருப்பை, கிலோ 129.65 ரூபாய்க்கு வழங்க ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மசூர் பருப்பை, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்திருந்தால், 45,000 டன்னுக்கு, 382 கோடி ரூபாய் தான் செலவாகி இருக்கும். ஆனால், 45,000 டன், கனடா மஞ்சள் பருப்பை, 583.42 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர். இரண்டுக்கும், 200.92 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது.
டெண்டரில் மசூர் பருப்பை சேர்த்திருந்தால், அரசின் நிதிச்சுமை கணிசமாக குறைந்திருக்கும். எனவே, பொது வினியோக திட்ட முறையில் வழங்கவும், வரும் காலங்களில் அறிவிக்கப்படும் டெண்டரில் மசூர் பருப்பை சேர்க்கவும் கோரி, அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ''மனுதாரர் மேற்கோள்காட்டிய ஆவணங்களின்படி மனுவை பரிசீலிக்க உத்தரவிடுவது தான்உகந்ததாக இருக்கும்.
''எனவே, மனுதாரர் தரப்பை கேட்டு, எட்டு வாரங்களுக்குள் சட்டப்படியான உத்தரவை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலர் பிறப்பிக்க வேண்டும்,'' என,உத்தரவிட்டார்.